கொரோனா அதிதீவிரம்: மாகாண மட்டத்திலாவது முடக்கம் வேண்டும்! – அரசிடம் சஜித் அணி வலியுறுத்து.

“கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. எனவே, முழு நாட்டையும் முடக்க முடியாவிட்டால் குறைந்த பட்சம் மாகாண மட்டத்திலாவது உடன் லொக்டவுண் நடைமுறையைப் பின்பற்றுங்கள்.”

இவ்வாறு அரசிடம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“ஒரு புறத்தில் எதிரணி உறுப்பினர்களை அரசியல் ரீதியில் வேட்டையாடிக்கொண்டு, மறுபுறத்தில் எதிரணியினரின் ஒத்துழைப்பு அவசியம் என அமைச்சர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாம் தயார். அது பற்றி கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும்.

கொரோனா விவகாரம் தொடர்பில் வைத்தியர்கள், துறைசார் நிபுணர்களிடம் ஆலோசனைகளைப் பெற்று அரசு எடுக்கும் முடிவுகளை நாம் ஆதரிப்போம். ஆனால், அரசியலை இலக்காகக்கொண்டு எடுக்கப்படும் முடிவுகளை ஆதரிக்க முடியாது.

நாட்டை முடக்குவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மூன்று மாதங்களாகக் கதைத்து வருகின்றார். அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்று தற்போது வேகமாகப் பரவி வருகின்றது. முழு நாட்டையும் முடக்க முடியாவிட்டால், மாகாண மட்டத்திலாவது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி கண்டுள்ளது. இதனை ஏற்க வேண்டும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூட கொரோனா விடயத்தில் தாம் தோல்வி என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.