முப்படைகளும் இருந்தபோது சாதிக்க முடியாததை மூன்று கட்சிகளால் சாதித்துவிட முடியுமா? – கணேஸ்

முப்படைகளையும் வைத்து செய்யமுடியாத வேலையை மூன்று தமிழ் கட்சிகளால் செய்துவிட முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கட்சி அலுவலக திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “அன்று சிங்கள அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்தோம். இன்று தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்த நிலையில் இருக்கின்றோம்.

தமிழ் அரசியல்வாதிகள் வேண்டாம் என்றுதான் 83ஆம் ஆண்டுகளில் இயக்கங்கள் உருவாக்கப்பட்டன. 30 வருடங்கள் யுத்தம் செய்தோம். உலகத்திலே இரண்டாவது பணக்கார இயக்கமாக சர்வதேச ஊடகம் குறிப்பிட்டுள்ள விடுதலைப் புலிகள் கூட சர்வதேச நாடுகளால் தோற்கடிக்கப்பட்டனர்.

இன்று இனவாதம் பேசும் மூன்று தமிழ் கட்சிகளும் எந்த விடயத்தை சாதிக்கப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. முப்படைகளையும் வைத்து சாதிக்க முடியாத வேலையை இவர்கள் தாம் சாதிக்கலாம் என்று எண்ணுகின்றார்கள்.

சர்வதேச நாடுகள் வரும், ஐக்கிய நாடுகள் சபை வரும், இந்தியா எங்களுக்குப் பின்னால் நிற்கிறது என்றெல்லாம் சொல்லி எத்தனை நாட்கள் எங்களை ஏமாற்றப்போகிறார்கள்?

இந்நிலையில், நாங்கள் தீர்வு என்று சொல்லிக்கொண்டு எல்லாவற்றிலும் பின்னிலையிலுள்ளோம். கல்வியில் கடைசி நிலையில் உள்ளோம். கிளிநொச்சி மாவட்டம் கடைசி மாவட்டமாக கல்வியில் உள்ளது. தீவகம் இலங்கையில் கடைசி வலயமாக உள்ளது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Comments are closed.