உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! பிளாஸ்டிக் பெரலும், பிளாஸ்டிக் உறையும் ! – 4

கல்முனையில் கைதாகிய சஹரானின் சாரதி கபூர் மாமா , வனாத்தவில்லு தோட்டத்தில் பாதுகாப்பாக பிளாஸ்டிக் பெரல் ஒன்றில் அடைத்து , ஒரு தொகை ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பது குறித்த தகவலை விசாரணையின் போது தெரிவித்தார்.

கடந்த 2019 தை மாதம் 16ம் திகதி அந்த தோட்டத்தை குற்றவியல் விசாரணைப் பிரிவு முற்றுகையிட்டு சிலரைக் கைது செய்தது. அப்போது கூட இந்த ஆயுதங்கள் அந்த இடத்திலேயே புதைக்கப்பட்டு இருந்துள்ளது. ஆனால் அது அப்போது கண்டு பிடிக்கப்படவில்லை. அந்த நேரத்தில் கைதானவர்கள் சில உயர் அரசியல்வாதிகளின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டிருந்தார்கள். அத்தோடு அங்கிருந்த சிலர் தலைமறைவாகியும் இருந்தார்கள்.

கபூர் மாமா கொடுத்த தகவலின் பின் வனாத்தவில்லுவிலிருந்த 80 ஏக்கர் தென்னந் தோட்டத்தின் பின் பகுதியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட பெரலில் இருந்த அனைத்து ஆயுதங்களையும் குற்ற புலனாய்வு பிரிவினர் எடுத்துக் கொண்டார்கள்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அங்கே வவுணதீவு போலீசாரைக் கொலை செய்து , அவர்களிடமிருந்து பறித்துக் கொண்ட ஒரு ரிவோல்வரும் இருந்தது. அதற்கு மேலாக T56 சுடுகலன் ஒன்றும் , மைக்ரோ தர கைத் துப்பாக்கி ஒன்றும் , உள் நாட்டு தயாரிப்பான 6 ரிவோல்வர்களும் , தோட்டக்களும் , ஆயுத உதிரிப் பாகங்களும் இருந்தன.
_________________________________
கல்முனை சாய்ந்தமருது தாக்குதலின் பின் அந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பரவலாக பகிரப்பட்டன. வெடித்துக் கொண்டு இறந்தவர்களது புகைப்படங்களும் அதனிடையே பகிரப்பட்டன.

கொல்லப்பட்ட ஒருவரது பிணத்தின் அருகே கிடந்த பிளாஸ்டிக் உறையொன்றோடு கூடிய ஒரு படம் ஒர் அதிகாரியின் விசேட கவனத்தை ஈர்த்தது. அந்த பிளாஸ்டிக் பையில் உள்ள கிரியுல்ல பகுதி கடையின் முகாமையாளரை அந்த அதிகாரிக்கு தெரிந்திருந்தது. அந்த பிளாஸ்டிக் பை , ஒரு துணிக் கடையின் பெயர் பொறித்த பையாகும். உடனே அவர் அந்தக் கடையின் முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அந்த புகைப்படத்தை பகிர்ந்து , விபரத்தை முகாமையாளருக்கு அந்த அதிகாரி விளக்கினார்.

அந்த படத்தைக் கண்ட கடை முகாமையாளர் , உடனடியாக தனது கடையில் பொருத்தியிருந்த சீசீடிவீ கமராவின் முன்னர் பதிவாகியிருந்த காட்சிகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார். கடந்த ஏப்ரல் 19ம் திகதி புர்க்கா உடையணிந்த பெண்கள் சிலர் வந்து அவரது கடையில் பொருட்கள் வாங்குவது ஒளிப்பதிவில் பதிவாகியிருந்தது. அந்த பெண்கள் என்ன வாங்கினார்கள் என்பதை அவர் பரீட்சித்து பார்த்தார்.

அவர்கள் 29 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெள்ளை நிற பிளவுஸ்கள் , ஸ்கர்ட்ஸ்கள் , பிரெசியர்கள் ஆகியவை ஒவ்வொன்றும் 9 வீதம் வாங்கியிருப்பது தெரிய வந்தது. அதற்குமேல் 2 குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களும் வாங்கப்பட்டிருந்தன.
அவர்கள் ஒரு வெள்ளை வானில் வந்திருப்பது கூட ஒளிப்பதிவில் காணக் கூடியதாக இருந்தது. அந்த விபரங்களை போலீசாருக்கு உடனடியாக கடை முகாமையாளர் அறிவித்தார். அந்த வெள்ளை உடைகள் குறித்த அவதானம் அதன் பின்னே அதிகாரிகளுக்கு வருகிறது.

அந்த 9 உடைகளில் 7 உடைகள் மாத்திரம் சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் வெடித்து இறந்த வீட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டன. அடுத்த 2 உடைகளுக்கு என்ன ஆனது என இதுவரை தெரியவில்லை.

அந்த வெள்ளை உடைகளை இவர்கள் ஏன் வாங்கினார்கள் என்பது குறித்து எல்லோரிடமும் ஒரு கேள்விக்குறி இன்றுவரை புரியா புதிராக உள்ளது. அந்த உடைகளை வாங்கச் சென்ற ஒருவர் மட்டுமே இப்போது உயிரோடு இருக்கிறார். அவர் சஹரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமாவாகும்.

அம்பாறை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவரிடம் போலீசார் அது குறித்துக் கேட்ட போது , அதை ஏன் வாங்கியது என தனக்கு தெரியாது என பாத்திமா தெரிவித்துள்ளார்.

அதைக் கடையில் வாங்கியது இரண்டாவது தற்கொலைத் தாக்குதலுக்கு தயாராக இருந்த புலஸ்த்தி ராஜேந்திரன் எனப்படும் சாரா என பாத்திமா தெரிவித்துள்ளார். தான் எதற்கு எனக் கேட்ட போது “முன்னால் தேவைப்படும். அதுதான் வாங்குகிறேன்” என சாரா தெரிவித்ததாக சஹரானின் மனைவி பாத்திமா அப்போது தெரிவித்துள்ளார். இன்று (15.05.2019) பாத்திமா குற்றப் புலனாய்வு துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சிலவேளை அது குறித்த மேலதிக தகவல்களை அவர் இனிச் சொல்லலாம்?

(குறிப்பு : இத் தொடர் தாக்குதல் காலத்தில் வெளி வந்தவை)
தொடரின் முன்னை பகுதிகள் ……
1. பிரிவினையால் திட்டம் சிதறியது! -01
https://www.facebook.com/photo.php?fbid=10158643674218902
2. தடயங்களும் தேடல்களும் ! – 2
https://www.facebook.com/ajeevan…/posts/10158644898178902
3. வவுணதீவு கொலைகளும் சஹரானின் வேலை ! – 3
https://www.facebook.com/photo.php?fbid=10158649511303902

Leave A Reply

Your email address will not be published.