சமந்தா புலிகளின் மனித வெடிகுண்டாகும் காட்சி கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது (Video)

அமேசான் பிரைம் இன்று வெளியிட்டுள்ள “The family man (part 2) ” எனும் வெப் சீரிஸின் இரண்டுநிமிட ட்ரைலர் பலரது கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் எதிர்கொண்டுள்ளது . இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சமந்தா விடுதலைப்புலிகளின் இயக்கத்தை சேர்ந்த ஒரு மனிதவெடிகுண்டாக சித்தரிக்கப்பட்டுள்ளமை, ட்விட்டரில் ” the family man 2 against” எனும் hashtag trendingகை உருவாக்கியுள்ளது .

ஒட்டுமொத்த ஆங்கில மற்றும் வடநாட்டு , ஆந்திர ஊடகங்களில் இந்த கதாபாத்திரம் பற்றி சொல்லும்போது ” ஒரு தீவிரவாத கும்பலுடன் இணைந்து செயல்படும் ஸ்லீப்பர் செல்லாக நெகடிவ் ரோலில் சமந்தா நடிக்கிறார் எனும் விளம்பரங்கள் , விடுதலைப்புலிகளின் இயக்கத்தை மிக மோசமான தீவிரவாத இயக்கமாக காட்டுகிறதா என இந்த வெப் சீரிஸ் பலரது மனதிலும் கேள்வி கணைகளை எழுப்பியுள்ளது .

 

பிந்திய இணைப்பு :

அமெஸானில் வெளியாகவிருக்கும் தி ஃபேமிலி மேன் – சீஸன் 2ல் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. தமிழர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கிறதா ஃபேமிலி மேன் தொடர்?

அமெஸான் ஓடிடி தளத்தில் வெளிவந்த தி ஃபேமிலி மேன் தொடர், பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு தொடர். மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடித்த இந்தத் தொடர், ஒரு உளவு அதிகாரியின் சாகசங்களைச் சொல்லும் தொடராக வெளியானது.

முதல் சீஸன் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்த சீஸன் எப்போது என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இரண்டாவது சீஸன் ஜூன் 4ஆம் தேதி வெளியாகுமென அமெஸான் அறிவித்துள்ளது. இரண்டாவது சீஸனுக்கான ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது.

முதல் சீஸனின் பெரும் பகுதி கதை மும்பையில் நடப்பதாகக் காட்டப்பட்ட நிலையில், இந்த சீஸனில் கதையின் ஒரு பகுதி சென்னையில் நடப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், இது தொடர்பாக ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த ட்ரெய்லரில் வரும் அதிகாரி ஒருவர், “நமக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின்படி ஐஎஸ்ஐஎஸ்க்கும் அங்குள்ள கலகக்குழுக்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் திட்டமென்ன என்பதைக் கண்டறிய வேண்டும்” என்று பேசுகிறார். தமிழ் போராளியைப் போலக் காட்டப்படும் சமந்தா, “நான் எல்லோரையும் சாககொல்லுவேன்” (சாகடிப்பேன் அல்லது கொல்லுவேன்?) என்று பேசுகிறார். இலங்கையின் வரைபடமும் சீருடையில் போராளிக் குழுக்கள் பயிற்சி பெறும் காட்சிகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

இதையடுத்து, இந்த இரண்டாவது சீஸனில் கலகக் குழு என்று சொல்வது, தமிழ் போராளிகளைத்தான் என பலரும் தங்கள் கண்டனங்களை ட்விட்டரில் பதிவுசெய்து வருகின்றனர்.

“இந்திய இயக்குநர்களே, ஏற்கனவே இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று சொல்லுமளவுக்குச் செய்து வலதுசாரிகளுக்கு உதவினீர்கள். இப்போது தமிழர்களுக்கும் இதைச் செய்ய விரும்புகிறீர்களா?” என கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் பலர் யு ட்யூபில் இந்த ட்ரெய்லரை dislike செய்யும்படி கோரிவருகின்றனர். மேலும் பலர் அமெஸானுக்கு சந்தா கட்டுவதை நிறுத்த வேண்டுமென்ச் சொல்லியிருக்கின்றனர்.

இந்த இரண்டாவது சீஸன் தொடர்பாக இயக்குநர் ராஜ் நிதிமோருவும் கிருஷ்ணா டி.கேவும் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர். அதில் சமந்தாவின் பாத்திரம் மிகத் தீவிரமான பாத்திரம் என்றும் கதாநாயகனான ஸ்ரீகாந்த் திவாரியின் பாத்திரத்திற்கு மாறுபட்ட பார்வையைக் கொண்ட பாத்திரமென்றும் சொல்லியிருக்கின்றனர்.

“எந்த வன்முறையையும் நியாயப்படுத்தவில்லை. மாறாக அதற்குப் பின்னால் இருக்கும் சித்தாந்தத்தை சொல்கிறோம். நாங்கள் இதில் எந்த நிலைப்பாடும் எடுக்க விரும்பவில்லை. பார்வையாளர்களாகவே இருக்க விரும்புகிறோம். நாளிதழ்களில் வெளிவந்த தகவல்களை வைத்து ஒரு உலகை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார்கள் இயக்குநர்கள்.

The Family Man தொடர் என்பது தேசியப் புலனாய்வு முகமையில் அச்சுறுத்தல் ஆய்வு மற்றும் கண்காணிப்பு அணியில் (இது ஒரு கற்பனை அணி) பணியாற்றும் அதிகாரியான ஸ்ரீகாந்த் திவாரியின் சாகசங்களைச் சொல்லும் கதை. முதல் சீஸனில் ஐஎஸ்ஐஎஎஸ் குழுவால் தூண்டப்பட்ட இஸ்லாமியவாத தீவிரவாத தாக்குதல்களை ஸ்ரீகாந்த் திவாரியின் அணி முறியடிப்பதாகக் காட்டப்படும். மற்றொரு பக்கம், ஸ்ரீகாந்தின் குடும்ப வாழ்க்கை மோசமடைந்து கொண்டே போவது குறித்த காட்சிகளும் இடம்பெற்றன. ஸ்ரீகாந்தாக மனோஜ் பாஜ்பாயும் அவரது மனைவி சுசித்ராவாக பிரியாமணியும் நடித்திருந்தனர்.

இந்த இரண்டாம் பாகத்தில் ராஜி பெண் போராளி பாத்திரத்தில் சமந்தா நடித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.