ராஜபக்சக்கள் நாட்டை நாசமாக்கியதுதான் மிச்சம்! சம்பந்தன் காட்டம்.

“நாள்தோறும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் உச்சமடைகின்றன. இந்த அரசு ஆட்சிக்கு வந்து மக்களைப் பேரவலத்துக்குள் தள்ளி நாட்டை நாசமாக்கியதுதான் மிச்சம்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசு கூறும் புத்தாண்டுக் கொரோனா கொத்தணிக்கு பொதுமக்கள் பொறுப்பு அல்ல. அரசுதான் முழுப்பொறுப்பு.

தமிழ் – சிங்களப் புத்தாண்டுடன் நாட்டைக் குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது அரசு முழுமையாக முடக்கியிருந்தால் இந்தப் பேராபத்தை மக்கள் சந்திக்க வேண்டி வந்திருக்கவேமாட்டாது.

கொரோனாத் தொற்று அசுர வேகத்தில் அதிகரிக்க ஆரம்பித்தபோது அது தொடர்பில் துளியளவும் கவனம் செலுத்தாத இந்த அரசு, கொழும்புத் துறைமுக நகர விசேட பொருளாதார வலய ஆணைக்குழு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்குடனே செயற்பட்டது. அதில் தற்போது அரசு வெற்றியும் கண்டுள்ளது. ஆனால், நாடோ பேராபத்தில் சிக்கியுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.