ஒற்றுமையின்மை குறைகூறும் அரசியல் ஆகியவற்றால் மலையகம் பின்தங்கியது: ஜீவன்

” ஒற்றுமையின்மை மற்றும் குறைகூறும் அரசியலாலேயே எமது மலையகம் 30 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆனால், எமது சமுகம் அடுத்து வரும் காலப்பகுதியில் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது தொடர்பில் என்னிடம் தெளிவான வேலைத்திட்டங்கள் உள்ளன. எனவே, மக்கள் ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அட்டனில் 11.07.2020 அன்று இரவு அட்டன் நகர வர்த்தகர்களுடான நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” தம்மைதாமே அரசியல் ஜாம்பவான்கள் எனக்கூறிக்கொள்ளும் சில அரசியல்வாதிகள், கடந்தகாலம் முழுவதும் ஆயிரம் ரூபா தொடர்பில் குறைகூறியே ஏனையப் பிரச்சினைகளை மூடிமறைத்தனர். இன்று படித்த இளைஞர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு கல்விக்கேற்ப வேலை இல்லை. அதேபோல் சொந்தகாலில் நிற்பதற்கு முயற்சிக்கும் இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளும் இல்லை. மலையக மக்களுக்கு தோட்டத்தொழிலைதவிர வேறு எதுவும் தெரியாது என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலைமையை மாற்றவேண்டும்.

மலையகத்தில் நகரப்பகுதிகளில் கூலி வீடுகளில் வாழ்பவர்களுக்கான வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பிலும் எனது தந்தை திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரை விமர்சித்தனர். இன்று என்னை விமர்சிக்கின்றனர். இவர்களால்தான் மலையகத்துக்கு போதைப்பொருள் வந்தது எனக்கூறி கீழ்த்தரமான அரசியலை நடத்துவதற்கு நான் விரும்பவில்லை. ஆனால், போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி மலையகத்தில் அததன தடுப்போம்.

அட்டன் சந்தை அட்டனின் அடையாளம். அதனை திருத்தி அழகுப்படுத்தினால்போதும். அட்டனில் மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும். நிச்சயம் ஹட்டனை மலையகத் தமிழர்களின் தலைநகராக மாற்றலாம். நாம் ஆளுங்கட்சியில் இருக்கின்றோம். எனவே, எமக்கு வாக்களித்தால்தான், எமது மக்கள் வாக்களித்துள்ளனர் எனக்கூறி பேரம்பேசி, மக்களுக்கான தேவைகளை இலகுவில் நிறைவேற்றிக்கொள்ளகூடியதாக இருக்கும்.

இது என்னுடைய மலையகம். நீங்கள் என்னுடைய மக்கள். எனவே, இன்னும் 20 ஆண்டுகளில், 50 ஆண்டுகளில் மலையகம் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற இலக்கு என்னிடம் உள்ளது. அதனை நோக்கியே நாம் பயணிக்கவேண்டும். அதற்கு உங்களின் ஒத்துழைப்பும் அவசியம். ” – என்றார்

Comments are closed.