வேண்டுதல் (குறுநாவல்கள்)

எழுத்தாளர் ஜெகநாத் நடராஜன் அவர்களின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பே ‘வேண்டுதல்’ என்னும் இந்த சிறு புத்தகம்.

முதலில் எழுத்தாளர் குறித்து சில விஷயங்கள். சன் டிவியில் ஒளிபரப்பான தமிழின் முதல் மெகா ஸீரியலான ‘சக்தி’ தொடரின் வசனகர்த்தா! (தினசரி இரவு 09.30 மணிக்கு. பானுப்ரியா, அஜய் ரத்னம் நடித்தது. ஞாபகமிருக்கிறதா? . திரைப்படங்கள் & சின்னத்திரை தொடர்களில் பணியாற்றியுள்ளார். நெடுங்காலமாக அமைதியாக மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மிக முக்கியமாக மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் எழுத்து & திரைப்படப் பணிகளில் உதவியாக இருந்தவர். வாசகசாலை இணைய இதழில் இவரது கதைகள் வெளியாகியுள்ளது. ஜூன் மாத புரவி இதழில் ஒரு மொழிபெயர்ப்பு சிறுகதையும் வெளியாகவுள்ளது.

அடுத்து இந்த ‘குறுநாவல்’ என்னும் வடிவம் குறித்து சில விஷயங்கள். “குறும் புதினம் அல்லது குறுநாவல் (Novella) என்பது ஒருவகை உரைநடை இலக்கியம். இது புதினம் என்பதின் குறுகிய வடிவமாகும். ஒரு குறும்புதினம் சிறுகதைக்கும் புதினங்களுக்கும் இடைப்பட்ட ஒரு நெடுங்கதை வடிவமாகும்.” என தமிழ் விக்கிபீடியா கூறுகிறது. ஆங்கிலத்தில் “A novella is a short novel, that is, a narrative prose fiction whose length is shorter than that of most novels, but longer than most short stories.No official definition exists regarding the number of pages or words necessary for a story to be considered a novella or a novel” என்று காணப்படுகிறது.

இது போதாதென்று ஆனந்த விகடன் / உயிர்மை இதழ்களில் பயன்படுத்தப்படும் ‘நெடுங்கதை’ என்ற பதமும் கொஞ்சம் யோசிக்க வைக்கும். எழுத்தாளர் இமையம் அவர்களின் ‘நறுமணம்’ என்ற நெடுங்கதை உயிர்மை சைஸில் 16 அல்லது 17 பக்கம் இருந்த நினைவு! விஷயம் என்னவென்றால் இதன் வடிவம் எப்போதுமே என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும் என்பதுதான். இந்தப் புத்தகத்திலும்
அதேபோலான சிறுகுழப்பம் தொடரத்தான் செய்தது. இதிலுள்ள 4 குறுநாவல்களில் 2 கணையாழியிலும், 2 நகர்வு இணைய இதழிலும் வெளியாகியுள்ளது.

‘இழைகள்’ எனும் முதலாவது கதையில் சிதம்பரம் என்னும் சிறுவன் வேலையின் பொருட்டு கொஞ்ச நாட்களாக வீட்டுக்கு வராத தகப்பனைத் தேடி மேற்கொள்ளும் பயணமும், முடிவில் அவரைக் கண்டடைடையும் தருணமும் விவரிக்கப்படுகிறது. படைப்பில் ‘கே.எம்’ எனக் குறிப்பிடப்படும் அப்பா குறித்த சித்திரங்கள், அம்மாவுடனான அவரது உறவு எல்லாமே சிதம்பரத்தின் பார்வையில் அவன் பயணத்தின் வழி விரிகின்றன. அவன் அப்பாவை அவன் சந்திப்பது போன்றதோர் அசந்தர்ப்பமான தருணங்கள் வாழ்வில் எப்போதாவது நமக்கும் நேர்ந்திருக்கும். அப்பா அவன் கையிலிருந்து இரண்டு ரூபாயை மட்டும் எடுத்துக் கொள்ளும் கடைசித் தருணம் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது.

‘பிழைத்து வந்தவன்’ என்னும் இரண்டாவது கதை இரண்டு நண்பர்களைப் பற்றிப் பேசும் ஒரு கதை. வாழ்வில் சில நட்புகள் எவ்வாறு இத்தனை அழுத்தமாக உருவாகின்றது என்பது நாமறியாத புதிர்தான். அப்படி உருவாகும் நட்பிலுள்ள நண்பர்களின் பின்னணியில் விரியும் யதார்த்தம். அவ்வாறான ஒரு நண்பன் அனுப்பிய தற்கொலைக் கடிதம், அதன்பொருட்டு சென்னையிலிருந்து ராமநாதபுரம் வாலிநோக்கத்திற்கு கொட்டும் மழையில் ஒரு பயணம், பின் எதிர்பாராத தருணத்தில் பிழைத்து வந்த நண்பன் என ஒரு தீவிரப் பயணத்தின் கடைசி தருணம் சுழித்துப் போகும் மின்னல்!

‘மாடத்தி’ கிராமப் பின்னணியில் ஒரு பேய்க் கதை. கல்யானமான மறுநாளே கணவனை விட்டுப் பிரிந்த மாடத்தி, அவள் நினைவோடே சுற்றி வரும் மாசானம், பெண்கள் மீது ஆசை இருந்தும் ‘அதிர்ஷ்டம்’ இல்லாத ரத்தினசாமி ஆகியோர் பிரதான பாத்திரங்கள். ரத்தினசாமி கிணற்றில் பிணமாக மிதக்கும் மாடத்தி பேயாக இடுகாட்டில் தோன்றுவதும், பின்னுள்ள சித்தரிப்புகள், விசாரணை என நகரும் படைப்பில், ‘பேய்க்கு ஜாதி இல்லை, அறியோ?’ என்று முடியும் மந்திரவாதியின் வரிகள் செமயான முத்தாய்ப்பு!

தொகுப்பின் தலைப்புக் கதையான ‘வேண்டுதல்’ எனக்குப் பிடித்த கதையும் கூட. மகள் கோசலைக்குத் திருமணம் தள்ளிப்போவதால் புதுப்பணக்காரனான குலசரம் (என்ன ஒரு வித்தியாசமான பெயர்?) ஜோசியம் பார்த்து குலசாமி முண்டனுக்கு ஏதோ குறையிருப்பதாக கருதி செய்யும் வேண்டுதல் காரியங்களும், அதன் முடிவில் நடப்பதுவுமே கதை. சாமிக்கு ‘தனிக்கொடை’ எடுத்து அதை ஊர்க்கொடை போல நடத்த எடுக்கும் காரியங்கள், முண்டன் சாமி இறங்கும் செல்லையா பெரியப்பாவை சென்னையிலிருந்து வரவைப்பது, பிற சாமிகள் இறங்கி ஆடுதல் என விவரணைகள் அனைத்தும் அத்தனை துல்லியம். இறுதியில் சாமியின் வேண்டல் என்ன என்பதும், அதற்கு குலசரத்தின் ஒப்புதலும் எதிர்பார்க்காத சுவாரஸ்யமான ட்விஸ்ட்!

இறுதியாக, தொகுப்பின் நான்கு கதைகளிலும் தெள்ளெனத் தெரியும் வாழ்வனுபவங்களும், ஜெகநாத் நடராஜன் அவர்களின் கதை சொல்லும் முறையின் எளிமையும் தெளிவும் நம்மை ரொம்பவே கவர்ந்து விடுவதென்னவோ நிஜம்!  ஒன்றே ஒன்றுதான்…..சாரு பின்னட்டைக் குறிப்பில் பாராட்டியிருக்கும் குறுநாவல் இந்த நான்கில் எது என்பது மட்டுமே இப்போது எனது சந்தேகம்!

வேண்டுதல்
ஜெகநாத் நடராஜன்

எழுத்து பிரசுரம்
ரூ.100.

Leave A Reply

Your email address will not be published.