கொரோனாத் தொற்றாளர்கள் அதிகரித்தால் ஜூன் இறுதிவரை நாட்டை முடக்குங்கள்! – விசேட வைத்திய நிபுணர்கள் கோரிக்கை.

“இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை ஆயிரத்தையும் விடக் குறைந்தால் மாத்திரமே எதிர்வரும் 14ஆம் திகதி நாட்டை மீண்டும் திறக்க அனுமதிப்போம். இல்லையேல் நாட்டைத் திறக்க அனுமதிக்கமாட்டோம். தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தால் இம்மாத இறுதி வரையில் நாடு முடக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு தேசிய கொரோனாத் தடுப்பு செயலணியின் தலைவரான இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் விசேட வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், நிலைமைகளைக் கட்டுப்படுத்தும் வரை நாட்டில் பயணக் கட்டுப்பாட்டை நீடிக்க வேண்டும்

பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்களின் செயற்பாடுகள் மோசமானதாக அமைந்துள்ளன. அதிகாரிகளும் முறையாக தீர்மானம் எடுக்காது நிலைமைகளைப் பலவீனப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டை இப்போதைக்குத் திறக்க முடியாது. அவ்வாறு மீண்டும் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு நாடு வழமையான செயற்பாடுகளுக்காக அனுமதிக்கப்படுமாயின் அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.

தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு மேலும் நீடிக்கப்பட வேண்டும். இனிமேல் மேற்கொள்ளப்படவுள்ள பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் அடுத்தகட்ட தீர்மானம் எடுக்க முடியும்.

எதிர்வரும் வாரத்தில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டிய விதத்தில் பதிவாகினால் எதிர்வரும் 14ஆம் திகதி நாட்டைத் திறக்க அனுமதிக்க மாட்டோம்.

நாளாந்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் விட குறைவாக பதிவானால் மாத்திரமே மக்களின் செயற்பாடுகளை சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நடைமுறைப்படுத்த முடியும்.

அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயற்படவே அனுமதிக்க முடியும். இல்லையேல் இம்மாத இறுதி வரையில் நாடு முடக்கப்பட வேண்டும்” – என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.