கொரோனா பரவலும் , பொதுத்தேர்தலும் தொடர்பில் அரசு, எதிரணிகளின் நிலைப்பாடு ?

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அரசு, எதிரணிகள் தத்தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்துள்ளன.

கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்தால் குறித்த தினத்தில் பொதுத்தேர்தலை நடத்துவதா? இல்லையா? என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

பிரதான பரப்புரைக் கூட்டங்களில் மக்கள் அதிகளவில் கலந்துகொள்வார்கள் என்றபடியால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான பரப்புரைக் கூட்டங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம் என்று அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி வேட்பாளர்களின் சிறு பரப்புரைக் கூட்டங்கள் இடம்பெற எமது கட்சி அனுமதி வழங்கியுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் உருவெடுக்க ராஜபக்ச அரசே முழுப்பொறுப்பு என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் தெரிவித்தனர்.

மக்களின் சுகாதாரப் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் கொரோனாவின் தாக்கத்துக்குள் பொதுத்தேர்தலை நடத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணத்துடனேயே ஊரடங்கால் முடக்கப்பட்டிருந்த நாட்டை அரசு திறந்துவிட்டது எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

தற்போதைய நிலைமையில் பாதுகாப்பான முறையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது கேள்விக்குறியே எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே, இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தாமதிக்காமல் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Comments are closed.