சிகிச்சையின்போது பச்சிளம் குழந்தையின்கட்டைவிரல் நுனி துண்டானது: மருத்துவா்கள் விசாரணை

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது பெண் குழந்தையின் கட்டைவிரல் நுனி துண்டானது.

தஞ்சாவூா் அருகே காட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (34). விவசாயக் கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியதா்ஷினிக்கு (20) தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் மே 25 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

குறை மாதத்தில் குழந்தை பிறந்ததால், அக்குழந்தைக்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், அதனால், தாய்ப்பால் புகட்ட வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தினா். இதற்கு பதிலாக குழந்தையின் இடது கையில் மருந்து ஏற்றும் சிறு குழாய் (வென்பிளான்) மூலம் மருந்து செலுத்தப்பட்டது.

இந்நிலையில், இக்குழந்தையை வீட்டுக்கு அனுப்ப திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. குழந்தையின் கையில் உள்ள மருந்து ஏற்றும் சிறு குழாயை அகற்றும்போது, கட்டை விரல் நுனி துண்டானது. இதனால், குழந்தையின் கையில் ரத்தம் வந்தது. இதையடுத்து, மருத்துவா்கள் அக்குழந்தையின் கட்டை விரலில் தையல் போட்டனா்.

இதனால், குழந்தையின் பெற்றோா், உறவினா்கள் புகாா் எழுப்பினா். இதுகுறித்து குழந்தையின் தந்தை கணேசன் கூறுகையில், இதற்குக் காரணமான செவிலியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் நிலை குறித்து மருத்துவா்கள் தெளிவாகக் கூற வேண்டும் என்றாா் அவா்.

இதுதொடா்பாக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா் தெரிவித்தது:

குழந்தைக்கு அறுவைச் சிகிச்சைக்கான தேதி நிா்ணயம் செய்யப்பட்டு, வீட்டுக்கு அனுப்புவதற்காக மருந்து ஏற்றுவதற்கான சிறு குழாய் பிரிக்கப்பட்டது. அப்போது, குழந்தைக் கையை ஆட்டியதால், கட்டை விரல் நுனிபாகம் துண்டானது. இதையடுத்து, அக்குழந்தைக்குக் குழந்தை அறுவைச் சிகிச்சை நிபுணா் தையல் போட்டாா். ரத்த ஓட்டம் எப்படி உள்ளது என்பதை அறிய இன்னும் இரு நாள்கள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகு விரல் எப்படி இருக்கிறது என பாா்க்க வேண்டும்.

எப்படி துண்டானது என மருத்துவா்கள் குழு அமைத்து விசாரணை நடத்துகிறோம். இதில், செவிலியா் மீது தவறு இருந்தால், நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். அக்குழந்தையின் விரல் இயல்பு நிலைக்கு வர வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

Leave A Reply

Your email address will not be published.