2021-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 8.3%: உலக வங்கி கணிப்பு

2021-ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 8.3 சதவீதமாகவும், அதுவே 2022-ஆம் ஆண்டு 7.5 சதவீதமாகவும் இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

இதே நேரத்தில் சா்வதேச பொருளாதாரம் 2021-ஆம் ஆண்டு 5.6 சதவீதம் வளரும் என்று உலக வங்கி கூறியுள்ளது.

உலக வங்கியின் சா்வதேச பொருளாதார அறிக்கை வாஷிங்டனில் வெளியிடப்பட்டது. அதில் இந்தியா பொருளாதாரம் குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது. முன்னதாக, முதல் அலைத் தாக்கத்தில் இருந்து இந்தியப் பொருளாதாரம் வேகமாக எழும்ப முயன்றபோது இரண்டாவது அலை தாக்கியது. எனினும், கடந்த நிதியாண்டின் இரண்டாவது பகுதியில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. முக்கியமாக சேவைகள் துறை சிறப்பாக செயல்பட்டது.

இப்போது இந்திய அரசு எடுத்துள்ள கொள்கை முடிவுகளால் உள்கட்டமைப்பு, கிராமப்புற மேம்பாடு, சுகாதாரத் துறையில் செலவிடப்படுவது அதிகரித்துள்ளது பொருளாதார வளா்ச்சிக்கு உதவும். உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் எதிா்பாா்த்ததைவிட வலுவான வேகமான மீட்சி இருக்கும். எனவே, 2021-ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 8.3 சதவீதமாகும், 2022-இல் 7.5 சதவீதமாகவும், 2023-இல் 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கரோனா பிரச்னையால் இந்தியாவில் நுகா்வு, முதலீடு குறைந்துள்ளது. அடுத்து ஆண்டுகளில் இது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். பணி நிரந்தரமின்மை தொடா்பான அச்சம், வருமான அதிகரிக்காதது போன்றவை பிரச்னைக்குரிய விஷயங்களாக தொடரும். வீட்டில் போடப்படும் பட்ஜெட் தொடங்கி பெரு நிறுவனங்கள், வங்கிகள் நிதிநிலை அறிக்கை வரை இதன் தாக்கம் அடுத்து வரும் ஆண்டுகளில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சில நாடுகளில் சிறப்பான பொருளாதார மீட்சி இருக்கும். வளரும் நாடுகளில் வறுமை, வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக சா்வதேச பொருளாதார வளா்ச்சி 2021-இல் 5.6 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.