தமிழ்நாடு முழுவதும் தொடரும் தடுப்பூசி தட்டுப்பாடு: ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் புதன்கிழமை காலை நிலவரப்படி 12,520 டோஸ் தடுப்பூசிகள் மட்டும் கையிருப்பில் இருந்தது. அதில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என 10,930 டோஸ்களும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என 1,590 டோஸ்கள் கையிருப்பில் இருந்தது. இந்த தடுப்பூசிகள் சென்னை உட்பட இரண்டு, மூன்று மாவட்டங்களில் மட்டும் முன்பதிவு செய்தவர்களுக்கு செலுத்தப்பட்டன.

சென்னையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் திரை உலகினருக்கான தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தொடர்ந்து 4வது நாளாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. எப்போது தடுப்பூசி போடப்படும் என்ற தகவலும் தெரியாத நிலையில் பொது மக்கள் தினமும் மையங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு வார காலமாக ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தினந்தோறும் பொதுமக்கள் வந்து வரிசையில் காத்திருந்து தடுப்பூசி கிடைக்காமல் திரும்பி செல்கின்றனர்.

இதேபோன்று திருப்பூர், சேலம், நெல்லை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி தமிழகத்திற்கு வர மேலும் இரண்டு வாரங்கள் ஆகலாம் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.