திருமாவளவனை விமர்சித்த விவகாரத்தில் நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக சம்மன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விமர்சித்த விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராகும்படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கடந்த 2019ம் ஆண்டு இந்து கோயில்களின் வடிவமைப்புகள் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், அதே ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருமாவளவனை விமர்சிக்கும் வகையில், தனது டிவிட்டர் சமூக வலைதளத்தில் நடிகை காயத்ரி ரகுராம் பதிவிட்டிருந்தார். இதையடுத்து காயத்ரி ரகுராமுக்கு எதிராக விடுதலை சிறுத்தை கட்டியினரிடம் கடும் எதிர்ப்பலைகளும், கடுமையான விமர்சனங்களும் எழுந்தன.

இதற்கிடையில், விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டப்பிரிவு துணை செயலாளரான வழக்கறிஞர் ஏ.காசி என்பவர் சென்னை சைதாப்பேட்டை 23வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தங்கள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு, களங்கம் ஏற்படுத்தம் வகையில் நடந்துகொண்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை. வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி கவுதமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நடிகை காயத்ரி ராகுராமுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜூலை 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.