பள்ளிகள் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் நடத்தும் ஆலோசனை!

தமிழ் நாடு : கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் கல்வி கற்றனர். முதல் அலையின் பாதிப்பு குறையத் தொடங்கிய சமயம் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.

ஆனால் பள்ளிகளில் கொரோனா பரவத் தொடங்கிய பின்னர் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக அதற்கும் வாய்ப்பில்லாமல் போனது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 36 ஆயிரமாக இருந்த பாதிப்பு தற்போது 14ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இனிவரும் நாள்களில் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கொரோனா தடுப்பூசியும் அதிகளவில் செலுத்தப்படுகிறது. இதனால் தொற்று விரைவில் முழுமையாக கட்டுக்குள் வரும் என கூறப்படுகிறது.

இதனால் இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முதலமைச்சருடன் நாளை (இன்று ) இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடித்த மக்களுக்கு நன்றி. விரைவில் விமானப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்படும். பள்ளிகள் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.