இலங்கை கடற்பரப்பில் பஸ் ‘பொடி’களை இறக்குவதா? தமிழக மீனவர்கள் கடும் சீற்றம்! – ஆர்ப்பாட்டத்துக்கும் ஏற்பாடு

தமிழ்நாடு : இலங்கையில் நீரியல் வளத் திணைக்களத்தால் கடற்பரப்பில் பழைய பஸ் ‘பொடி’களை இறக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி இராமேஸ்வரத்தில் நாளைமறுதினம் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இலங்கைக் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களமும் கடற்றொழில் கூட்டுத்தாபனமும் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட கடல் எல்லைக்குள் இ.போ.சபையினால் கைவிடப்பட்ட 40 பஸ் ‘பொடி’களைக் கடலில் இறக்கும் பணி கடந்த 11ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றது. மீன் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் கைவிடப்பட்ட பஸ் சிதிலங்களைக் கடலில் இறக்கும் திட்டம் காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு இடம்பெறுகின்றது.

இது தொடர்பில் இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (14) மேற்கொண்ட அவசர கலந்துரையாடலின்போதே நாளைமறுதினம் (16) இராமநாதபுரம் பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டம் துறைமுக வளாகத்தில் துறைமுக விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் என்.தேவதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

இராமேஸ்வரம், மண்டபம், சோலியக்குடி, ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், சேதுபாவசத்திரம், மல்லிப்பட்டினம், நாகபட்டினம், காரைக்கால், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, காரைக்கால் போன்ற இடங்களில் கொரோனாப் பரவலைக் கருத்தில் கொண்டும் தொற்றுப் பரவக்கூடாது என்ற நோக்கத்துடனும் வருகின்ற 30.06.2021 திகதியன்றே தொழிலுக்குச் செல்வது என்று தீர்மானிக்கப்படுகின்றது.

தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் கச்சதீவு பகுதியில் இலங்கை அரசு பழைய பஸ்களின் கூடுகளைக் கடலில் இறக்கி, சுற்றுச்சூழலைப் பெருமளவு பாதிக்கச் செய்வதுடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கத்துடனும் செயற்படும் இலங்கை அரசின் நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய இலங்கை அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் கடலில் பழைய பஸ்களின் கூடுகளை இறக்குவதைக் கண்டித்தும் தொடர் போராட்டங்கள் நடத்துவது என்றும், முதற்கட்டமாக நாளைமறுதினம் புதன்கிழமை காலை 10 மணியளவில் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.