தமிழரின் அபிலாஷைகள் நிறைவேற டில்லியின் நிலையான ஆதரவு : இந்தியத் தூதுவர் எடுத்துரைப்பு

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவு இருக்கும்.”

– இவ்வாறு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் இன்று நேரில் உறுதியளித்தார் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்தியத் தூதுவருக்கும் இடையில் இன்று பகல் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே இந்தியத் தூதுவர் மேற்படி வாக்குறுதியை வழங்கினார்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் இன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற சூழலில் இந்தத் திடீர் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சந்திப்பு நடத்த இருந்தது. இருப்பினும் அது இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், கொழும்பில் முகாமிட்டிருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தியத் தூதுவருடனான இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, புதிய அரசமைப்பு, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட தமிழ் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் இதன்போது பேசப்பட்டன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.