சைக்கிளில் மின்னல் வேக டெலிவரி கொடுத்த சோமோட்டோ டெலிவரி பாய் – இன்ப அதிர்ச்சி கொடுத்த நெட்டிசன்கள்

ஹைதராபாத்தை சேர்ந்த ராபின் முகேஷ் கடந்த திங்கள்கிழமை இரவு சோமாட்டோ ஆப்பில் உணவு ஆர்டர் கொடுத்துள்ளார். ஆர்டர் கொடுத்த 20 நிமிடத்தில் டெலிவரி பாய் அழைத்துள்ளார். ராபின் அந்த உணவை பெறுவதற்காக தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். ராபினுக்கு ஒரே ஆச்சர்யம் அவர் உணவு ஆர்டர் செய்த இடத்துக்கும் இவரது வசிப்பிடத்துக்கும் இடையே 9 கி.மீ தொலைவு இருக்கும். டெலிவரி பாய் ஆர்டர் செய்த உணவை சைக்கிளில் வெறும் 20 நிமிடத்தில் கொண்டு வந்தது அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
டெலிவரி செய்ய வந்த இளைஞர் குறித்து விசாரித்துள்ளார். ஒரு வருடமா இங்க சோமாட்டோவில் வேலை செய்கிறேன் எனக் கூறியுள்ளார். அந்த நபரை உடனடியாக தனது மொபைல் கேமரா மூலம் போட்டோ எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதோடு நிறுத்தாமல் ராபின் செய்த மற்றொரு காரியம் நெட்டிசன்களிடையே வரவேற்பை பெற்றது.
இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ராபின், “என்னுடைய ஆர்டரை முகமது அகில் மின்னல் வேகத்தில் கொண்டு வந்து டெலிவரி செய்தார். என்னுடைய ஆர்டர் கன்ஃபார்ம் செய்யும் போது அவர் மெஹதிபுட்னத்தில் இருந்தார். நிலோஃபர் லக்திகாபுல் பகுதியில் என்னுடைய ஆர்டர் கன்ஃபார்ம் ஆனது. அதனை கிங் கோட்டி பகுதியில் டெலிவரி செய்தார். அவர் இப்போது பொறியியல் படித்து வருகிறார். எல்லாமே இந்த சைக்கிளால் தான் சாத்தியமாகிறது. நீங்கள் இவரை பார்க்க நேரிடும் போது தாராளமாக உதவி செய்யுங்கள். நான் டீ ஆர்டர் செய்திருந்தேன். அது மிகவும் சூடாக இருந்தது. “ எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப்பதிவு நெட்டிசன்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து முகமது அகிலுக்காக சமூகவலைத்தளம் மூலம் பண்ட் ரைஸ் செய்துள்ளார். 10 மணி நேரத்தில் சுமார் 60000 வரை நிதி கிடைத்துள்ளது. அவர் இந்த பண்ட் ரைஸிங் கேம்பைனை முடித்துக்கொண்டபோது நல்ல உள்ளம் படைத்தவர்கள் கிட்டத்தட்ட 73000 வரை நிதியுதவி செய்திருந்தனர்.
“அகிலுக்காக டிவிஎஸ் XL பைக் புக்கிங் செய்துள்ளேன். இதன் விலை ரூ.65000 இரண்டு நாள்களில் பைக்கை டெலிவரி செய்துவிடுவார்கள். அகிலுக்கு ரெயின் கோட் மற்றும் ஹெல்மெட் வாங்கிக்கொடுக்கவுள்ளேன். மீதமுள்ள பணத்தை அவரது கல்லூரி கட்டணத்துக்காக அவரிடமே கொடுத்து விடுவேன் என்கிறார் ராபின்.