இஸ்ரேலில் மாறியது ஆட்சியா? இல்லை தலையா? : சண் தவராஜா

இஸ்ரேல் நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது.

12 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகத் தலைமை அமைச்சராகப் பதவி வகித்த பெஞ்சமின் நெத்தன்யாஹூ பதவியில் இருந்து அகற்றப்பட்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர வைக்கப்பட்டிருக்கின்றார். 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் 59 உறுப்பினர்களின் ஆதரவையே அவரால் திரட்ட முடிந்தநிலையில் ஆட்சி அவரின் கையைவிட்டுப் போயுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள அவர் சகல தந்திரங்களையும் பாவித்துப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றபோதிலும் அது முடியாமற்போய்விட்டது. காசா பிராந்தியத்தில் ஒரு தாக்குதலை நடாத்தி, அதன் மூலம் ஆதரவைத் திரட்டிக் கொள்ளலாம் என அவர் மேற்கொண்ட இறுதி முயற்சியும் வெற்றியளிக்காமல் போய்விட்டது. இந்த நிலையில் புதிதாக ஆட்சித் தலைமையை ஏற்றுள்ள – அவரது முன்னைநாள் சகாவான – நப்ராலி பென்னற் அவர்களின் ஆட்சியை “இடதுசாரி ஆட்சி” என வர்ணித்துள்ள அவர், வெகு விரைவில் அந்த ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாகவும் சூழுரை செய்துள்ளார்.

நெத்தன்யாஹூ ஆட்சி கவிழ்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பல மாதங்களாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து வந்தது. அமெரிக்க அரசுத் தலைவராக இருந்த டொனால்ட் ட்ரம்போடு நெருங்கிய உறவில் இருந்த அவர், அமெரிக்காவின் நீண்டநாள் நண்பர்களான எகிப்து மற்றும் யோர்தான் ஆகிய நாடுகளுடன் முரண்டுபிடிக்கும் வகையில் நடந்து கொண்டார். அது மட்டுமன்றி சவூதி அரேபியாவுடன் மிக நெருக்கமான உறவையும் பேணி வந்தார்.

அமெரிக்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அவர் எதிர்பார்த்திராத ஒன்று. ஜோ பைடன் ஆட்சியில் ‘வேண்டத்தகாத’ ஒருவராக நெத்தன்யாஹூ பார்க்கத் தொடங்கப்பட்டதும் அவரது வெளியேற்றம் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. இந்த நிலையில், புதிய ஆட்சியை மாற்றிவிடப் போவதாக அவர் மார்தட்டினாலும் அதற்கு முயற்சி செய்ய மாட்டார் என நம்பலாம்.

மறுபுறம், புதிய தலைமை அமைச்சர் நப்ராலி பென்னற் அமெரிக்காவின் விருப்பத்துக்குரிய ஒருவராக மாறியுள்ள நிலையிலும், தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புவதாலும் நெத்தன்யாஹூ அவர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதைத் தடுத்துவிட சகல வழிகளிலும் முயற்சிப்பார் என நம்பலாம்.

நெத்தன்யாஹூ மீதான வழக்கைத் துரிதப்படுத்தி விசாரித்துத் தண்டனை வழங்குவதுடன், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடாதவாறு தடுத்துவிடவும் முயற்சி செய்வார் என எதிர்பார்க்கலாம்.

கடந்த இரண்டு வருடங்களில் நான்கு முறை பொதுத் தேர்தலைச் சந்தித்த இஸ்ரேல் மக்கள் புதிய ஆட்சி மாற்றத்தினால் தற்காலிக நிம்மதியையே அடைய முடியும். ஏனெனில், ஆட்சியைப் பிடித்துள்ள 8 கட்சிகளின் கூட்டணி ஒன்றுக்கொன்று முரணான கொள்கைகளை உடைய கட்சிகளின் கதம்பமாகவே அமைந்திருக்கின்றது. நெத்தன்யாஹூ அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றுவது என்பதைத் தவிர வேறு பொதுவான கொள்கை ஒன்றும் அந்தக் கட்சிகளின் மத்தியில் இருப்பதாகத் தெரியவில்லை. உள்நாட்டில் ஏற்பட்டள்ள பணவீக்கம், தொழில் இழப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு முன்னுரிமை தரவேண்டிய நிலையில் உள்ள அரசாங்கம் பாலஸ்தீனர்களின் விவகாரத்தையும் கையாள வேண்டிய நிலையில் உள்ளது. இன்றைய நிலையில் இஸ்ரல் நாட்டு மக்களில் 20 வீதமானோர் வறுமைக் கோட்டின் கீழ் வசிப்பதாகப் புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடும் போக்காளர் எனக் கருதப்படும் நெத்தன்யாஹூ பதவியில் இருந்து அகற்றப்பட்டாலும் பாலஸ்தீன விவகாரத்தில் புதிய அரசு மென்மைப் போக்கைக் கடைப்பிடிக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது. நெத்தன்யாஹூ அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக முன்னர் பதவி வகித்தவரே தற்போதைய தலைமை அமைச்சரான பென்னற். அது மாத்திரமன்றி தான் அளவுக்கு அதிகமான பாலஸ்தீனர்களைக் கொன்றிருப்பதாகப் பெருமையாகக் கூறிக் கொள்பவரும் கூட. மேலும், அரபு நாடாளுமன்ற உறுப்பினரான அஹ்மட் ரிபி, பென்னற் தன்னோடு ஒருதடவை பேசும்போது, “நீங்கள் மரங்களில் தொங்கிக் கொண்டிருந்த போதே நாங்கள் இங்கு வந்து விட்டோம்” எனத் தங்களைக் குரங்குகளுக்கு ஒப்பிட்டுப் பேசியதாகத் தெரிவித்திருந்தார்.

அத்தகைய ஒருவரிடம் இருந்து பாலஸ்தீன மக்கள் நேசக்கரத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், அவரது கூட்டணியில் உள்ள தொழிற் கட்சி மற்றும் அரபு மக்களின் கட்சி ஆகியவற்றின் ஆதரவைத் தக்கவைக்க வேண்டுமாயின் சற்று அடக்கி வாசிக்க வேண்டிய தேவை உள்ளது. தனது கூட்டணியில் உள்ள இரண்டாவது பெரிய கட்சியின் தலைவரும் தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சருமான யாயிர் லப்பிட் அவர்களிடம் இரண்டு வருடங்களின் பின்னர் தலைமை அமைச்சர் பதவியைப் பகிர்ந்து கொள்வதாக ஒப்பந்தம் செய்துள்ள பென்னற், ஆகக் குறைந்தது அது வரைக்குமாவது தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பார் என நம்பலாம்.

ஆட்சி மாற்றம் இஸ்ரேல் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை அவர்களின் கொண்டாட்டத்தில் இருந்து அறிந்துகொள்ள முடிந்தது. அதேவேளை, பாலஸ்தீனத் தரப்பில் அவநம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பே உள்ளது. புதிய அரசாங்கம் ஒன்றும் பழைய அரசாங்கத்தில் இருந்து வேறுபட்டு நிற்கப் போவதில்லை என்பது கடந்த புதன்கிழமை காசா மீது இஸ்ரேலிய வான்படை நடாத்திய விமானத் தாக்குதல் மூலம் வெளிப்பட்டு விட்டது. காசா பகுதியில் இருந்து பலூன்கள் பறக்கவிடப்பட்டன என்பதைச் சாக்காக வைத்து இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

முன்னதாக, ஜெரூசலம் பகுதியில் நெத்தன்யாஹூ தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது என பாலஸ்தீனத் தரப்புகளிடமிருந்தும், ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் இருந்தும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்ட போதிலும் அது கவனத்தில் கொள்ளப்படவில்லை. குறித்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்த வலதுசாரிக் கட்சிகள் புதிய அரசாங்கத்துக்கு அழுத்தம் தரும் ஒரு செயற்பாடாக இதனைக் கருதிய அதேவேளை, தனது செல்வாக்கைப் புலப்படுத்தும் ஒரு மார்க்கமாக நெத்தன்யாஹூ அதனைப் பயன்படுத்திக் கொண்டார். அது மட்டுமன்றி, இதுபோன்ற பல நெருக்கடிகளைத் தினமும் அரசுக்கு வழங்கப் போவதாகவும் அவர் எச்சரித்தும் உள்ளார்.

நெத்தன்யாஹூ ஆட்சிக் காலத்தில் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதாகக் கருதப்படும் வெளிநாடுகளுடனான உறவைச் சீர்செய்வதுடன், உள்நாட்டில் பொருளாதாரச் சரிவையும் ஈடுகட்ட வேண்டிய பொறுப்பில் உள்ள பென்னற் அரசாங்கத்துக்கு அதற்கான அவகாசத்தை வழங்குவதற்கு நெத்தன்யாஹூ தயாராக இல்லை என்பது ஆரம்பக் கட்டத்திலேயே தெரிகின்றது. அவரின் தந்திரங்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடுகளைக் கடைப்பிடிக்காவிடில் பென்னற் அரசாங்கம் கவிழ வேண்டிய நிலை ஏற்படலாம். இல்லாவிட்டால், தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள – நெத்தன்யாஹூ செய்தததைப் போல – பாலஸ்தீன மக்கள் மீதான அடக்குமுறைகளை அதிகரிக்கலாம். அத்தோடு, சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மீதான கெடுபிடிகளையும் அதிகரிக்கலாம்.

ஈற்றில், ஆட்சியாளர்கள் மாறினாலும் ஆட்சிகள் மாறுவதில்லை என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாகவே இஸ்ரேலின் தற்போதைய அரசாங்கமும் மாறும் அறிகுறிகளே அதிகம் தென்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.