சமையல் எரிவாயு விலை தொடர்பில் பந்துல அறிவிப்பு!

“நாட்டின் தற்போதைய நிலைமையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது. அதேவேளை 12.5 கிலோ எரிவாயு அனைத்து எரிவாயு நிலையங்களிலும் தட்டுப்பாடு இன்றி இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (22) சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் யோசனை, நிறை குறைப்பு மற்றும் சந்தையில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறிய அமைச்சர் பந்துல, மேலும் கூறியதாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“நிறை குறைந்த புதிய எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு அறிமுகம் செய்ய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஒருபோதும் அனுமதியளிக்கவில்லை. ஆனால், இந்த விடயத்தில் அநுரகுமார திஸாநாயக்க கூறுவது போன்று நடந்துள்ள அநீதிகளை ஏற்றுக்கொள்கிறேன். இதன்மூலம் நுகர்வோரை எரிவாயு நிறுவனங்கள் ஏமாற்றியுள்ளன. நுகர்வோருக்கு தீர்மானம் எடுக்க முடியாத நிலை உள்ளது. எமது அமைச்சின் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, இந்தப் புதிய அறிமுகம் தொடர்பில் ஆய்வொன்றை நடத்தியுள்ளார்.

12.5 எரிவாயுக்கு சந்தையில் தட்டுப்பாடு உள்ளதென்பதை நாம் நடத்திய ஆய்வில் ஏற்றுக்கொள்கிறோம். அதிவிசேட வர்த்தமானி ஊடாக அனைத்து எரிவாயு நிரப்பும் நிலையங்களிலும் 12.5 கிலோ எரிவாயு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

இந்த விதிமுறைகளுக்கு எதிராகச் செயற்படும் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளோம். லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா த் தொற்று காரணமாக உலகப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகளாவிய நெருக்கடியாகும். எனினும், நாம் மக்கள் பக்கமிருந்துதான் அனைத்துத் தீர்மானங்களையும் எடுக்கின்றோம். ஆனால், இந்த நேரத்தில் எரிவாயு விலை கட்டுப்பாடற்ற நிலையில் அதிகரிக்கப்பட்டால் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என ஜனாதிபதி கூறினார்.

தற்போதைய சூழலில் எரிவாயு விலையை அதிகரிக்குமாறு கோருவதில் நியாயம் உள்ளது. எனினும், இது தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் ஊடாக எரிவாயு விலையை ஒரு சதத்தில்கூட அதிகரிக்காது பழைய விலையில் தொடர்ந்து மக்களுக்கு பெற்றுக்கொடுக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிவாயு மீதான துறைமுக அபிவிருத்தி வரியை நீக்கவும் நட்டத்தைக் குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், லிட்ரோ மற்றும் லாப் என இரண்டு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எரிவாயுக்கான அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.