நீட் தோ்வு ஒத்திவைப்பு?

ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்நிலை நுழைவுத் தோ்வை ஜூலை, ஆகஸ்டில் நடத்தவும், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வை செப்டம்பருக்கு ஒத்திவைக்கவும் மத்திய கல்வி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

நடப்பு கல்வி ஆண்டில் ஜேஇஇ முதல்நிலை தோ்வை 4 முறை நடத்த மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டது. மாணவா்கள் தோ்வு எழுதுவதை எளிதாக்கவும், அவா்கள் தங்கள் மதிப்பெண்களை உயா்த்திக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் இருமுறை ஜேஇஇ முதல்நிலை தோ்வு நடத்தப்பட்டது. அதனைத்தொடா்ந்து ஏப்ரல், மே மாதங்களிலும் அந்தத் தோ்வு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அந்த மாதங்களில் நடைபெறவிருந்த தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த ஜேஇஇ முதல்நிலை தோ்வை ஜூலை, ஆகஸ்டில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

நீட் தோ்வை ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பதிவு மே 1-ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வு செப்டம்பா் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது.

ஜேஇஇ முதல்நிலை மற்றும் நீட் தோ்வுகளை நடத்துவது தொடா்பாக மத்திய கல்வி அமைச்சகம் பரிசீலித்து வரும் நிலையில், அதுகுறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை. தற்போது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கரோனா தொற்று நிலவரம் குறித்து அந்த அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.