டெல்லியில் இன்று நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் நாசவேலைக்கு சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று நடத்தவுள்ள போராட்டத்தின்போது நாசவேலைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தபோதிலும் அவை தோல்வியிலேயே முடிந்தது. இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை.

கடந்த நவம்பர் 27ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் இன்று 7வது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி விவசாயிகள் சார்பில் இன்று டிராக்டர் பேரணி நடைபெறவுள்ளது. விவசாயத்தை காப்போம், ஜனநாயக நாளை காப்போம் என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் டிராக்டர் பேரணிக்கான ஏற்பாடுகள் டெல்லி எல்லைகளான சிங்கு, திக்ரி, காசியாபாத் ஆகிய பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தின் நாசவேலைகளை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக டெல்லி அரசுக்கு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இது தொடர்பாக டெல்லி அரசு, விமான நிலையம் மற்றும் டெல்லி மெட்ரோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் பிற அமைப்புகளுக்கு உளவு அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.யின் பிரதிநிதிகள் விவசாயிகள் போராட்டத்தில் பாதுகாப்புப் படையினரை தூண்டி நாசவேலையில் ஈடுபடக்கூடும் என எச்சரித்துள்ளது. எனவே ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையம் முன்பும் தகுந்த அதிகாரி தரவரிசையில் உள்ள காவலர்களை நிறுத்தி எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை அடுத்து விஸ்வவித்யாலயா, சிவில் லைன்ஸ் மற்றும் விதான் சபா ஆகிய மெட்ரோ நிலையங்களை இன்று காலை 10 மணி முதல் 2 மணிவரை தற்காலிகமாக மூடுவதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆளுநரின் வீட்டின் அருகே விவசாயிகள் கூடக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு பாதுகாப்பை டெல்லி போலீசார் அதிகரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.