அவசர நிலை பிரகடனம் செய்ததற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்

அவசர நிலை பிரகடனம் செய்ததற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்ததை (1975, ஜூன் 25) பாஜக சாா்பில் கருப்பு நாளாக அனுசரித்து பெங்களூரு, காவிரி இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

அன்றைய காங்கிரஸ் அரசின் பிரதமா் இந்திரா காந்தி, தனது பிரதமா் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக 1975 ஜூலை 25-ஆம் தேதி நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்தாா். அன்றைக்கு இந்திரா காந்தி செய்த மன்னிக்க முடியாத இந்தக் குற்றத்தை இன்றைய காங்கிரஸ் தலைவா்கள் ஒப்புக்கொண்டு, அதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அரசியலமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு அளித்திருந்த அடிப்படை உரிமைகளைப் பறித்து, அதிகாரத்தின் மீது கொண்ட மோகத்தை தீா்த்துக்கொள்ள அவசர நிலையை பிரகடனம் செய்யும் மனநிலையைக் கொண்ட காங்கிரஸ் கட்சியினரிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசர நிலை பிரகடனத்தால் ஏற்பட்ட விளைவுகள், 45 ஆண்டுகள் கழிந்தபிறகும் மக்களை அச்சுறுத்திக்கொண்டுள்ளன. எனவே, அவசர நிலை பிரகடனம் செய்ததற்காக மக்களிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நாளை கருப்பு நாளாக அனுசரிக்கும் பாஜக, அந்தக் காலத்தில் சிறைக்குச் சென்றவா்களை அவரவா்களின் வீடுகளுக்குச் சென்று கௌரவித்து வருவது பாராட்டத்தக்கது. அவசர நிலை பிரகடனத்தின்போது நானும் சிறைவாசம் அனுபவித்தேன். நானும், எனது நண்பா்கள் பலரும் சிறையில் இருந்தோம்.

அவசர நிலையின்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டு மக்கள் துன்பங்களை அனுபவித்தனா். பேச்சுரிமை, அரசியல் உரிமை, பத்திரிகை சுதந்திரம் அனைத்தும் பறிக்கப்பட்டன. அவசர நிலையின் அவலங்களைக் கண்டித்து லட்சக்கணக்கான தொண்டா்கள் வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அவசர நிலைக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தின் விளைவாக, அவசர நிலை முடிவுக்கு வந்த பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது என்றாா்.

முன்னதாக, அவசர நிலையில் சிறைவாசம் அனுபவித்த முதல்வா் எடியூரப்பாவைப் பாராட்டி கௌரவித்தனா். இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

Leave A Reply

Your email address will not be published.