சேதன பசளையினால் நஸ்டமடையும் விவசாயிகளுக்கு நஸ்ட ஈடு வழங்கப்படும்.

மட்டக்களப்பு: அனைத்து விவசாயிகளுக்கும் இலவச சேதனப்பசளை வழங்கப்படுவதுடன் அந்த சேதன பசளை விவசாயிகளுக்கு போதிய அறுவடையை வழங்காவிட்டால் அதற்குரிய நஸ்ட ஈடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகயிருப்பதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தினால் ஒரு கிலோ நெல் 30 ரூபாவுக்கு வாங்கப்பட்ட நிலையில் இன்று அரசாங்கம் 56 ரூபாவுக்கு மேல் கொள்வனவு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நிர்ணய விலைக்கு நெல்கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் அமைச்சர்கள் விஜயம் செய்து நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக அரசாங்கத்தின் நிர்ணைய விலைக்கு நெல் கொள்வனவு செய்யும் வேலைத் திட்டத்தினை சனிக்கிழமை (26)ஆரம்பித்து வைத்தனர்.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள அரசடிச்சேனை நெல் சந்தைப்படுத்தல் நிலையத்தில் இவ்வருடத்தின் சிறுபோகத்தில் விளைந்து உலர்த்திய நெல்லினை அரசாங்கத்தின் நிர்ணைய விலையான 56 ரூபாய் 50 சதத்திற்கு கொள்வனவு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர், அமைச்சின் செயலாளர்கள் போன்றோர் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக நெல் கொள்வனவை ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர்,

தற்போது விவசாயிகள் அறுவடையை பூர்த்திசெய்துள்ளனர். அரசாங்கம் நெல்லை கொள்வனவுசெய்ய ஆரம்பித்துள்ளது. விவசாய நடவடிக்கைக்கு தேவையானவற்றை அரசாங்கம் செய்யும்போது வெளியிலிருந்து வருபவர்கள் நெல்லை கொண்டு செல்கின்றனர். அதனை அதிகளவான விலையில் விற்பனை செய்கின்றனர்.

அரசாங்கம் நெல்லைக் கொள்வனவு செய்வது என்ற தீர்மானத்தினை அரசாங்கம் ஆட்சியமைக்கும் காலத்தில் தீர்மானித்தது. அதனால் நல்ல விலையில் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.

அறுவடைசெய்யும் நெல் அனைத்தையும் அரசாங்கம் கொள்வனவுசெய்வதற்கு தயாராகவுள்ளது. அரசாங்கத்திற்கு நெல்லை வழங்குவதன் மூலமே அதனை மக்களுக்கு அரசாங்காத்தினால் வழங்கமுடியும்.

நாங்கள் இந்த முறை மட்டுமே இரசாயண பசளையினை வழங்கினோம். அடுத்த போகத்திலிருந்து சேதனப்பசளையையே வழங்குவோம். யாரும் பயப்படத் தேவையில்லை. யுத்த காலத்தில் எங்களுக்கு யூரியா இருக்கவில்லை. யுத்த காலத்தில் நீங்கள் சேதனப் பசளையை பயன்படுத்தியே விவசாயம் செய்தீர்கள். விவசாயிகளின் பிரச்சினைகள் எல்லாவற்றையும் நாங்கள் சரிசெய்து கொடுக்கப்போகின்றோம். நைட்ரஜனை வெளிநாடுகளிலிருந்து கொண்டுவருகின்றோம்.
கடந்த ஆட்சியில் நெல் ஒருகிலோ 30 ரூபாவாகும். தற்போது ஐம்பது முதல் 60 ரூபா வரை நாங்கள் கொள்வனவு செய்கின்றோம். நல்லதொரு விலை உள்ளது. அடுத்தமுறை விவசாயம் செய்கின்றபோது இரசாயணப் பசளை இல்லையென நீங்கள் பயப்பட வேண்டாம். நாங்கள் விவசாயிகள் அனைவருக்கும் பசளை வழங்கப்போகின்றோம்.

வெளிநாடுகளிலிருந்து சேதனப் பசளைகளை கொண்டுவரப்போகின்றோம். அதனை இலவசமாக வழங்கவிருக்கின்றோம். விவசாயிகளை பாதுகாக்கவே அரசாங்கம் இருக்கின்றது.
இரசாயணப் பசளைகளை பாவித்ததால் என்ன நடந்தது? நாட்டில் பலர் புற்றுநோயினாலும் சிறுநீரக நோயினாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நாங்கள் நேற்று முன்தினம் பொலன்னறுவைக்கு சென்றிருந்தோம். அங்கு பல விவசாயிகளுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இது இரசாயணப் பசளைகளை உபயோகதித்ததன் விளைவாகும். நாங்கள் பலகாலமாக இரசாயணப்பசளைகளை உபயோகித்து வருகின்றோம். இது தீமையான விடயமாகும். அதனால்தான் ஜனாதிபதி அவர்கள் இந்த முடிவினை எடுத்துள்ளார்.

பொலன்னறுவை, அனுராதபுரம் பகுதிகளில் நீரிழிவு நோயாளர்கள் 25 வீதத்திற்கும் அதிகமுள்ளனர். இனி இரசாயணப்பசளைகளை நாங்கள் இங்கு கொண்டுவர அனுமதிக்கமாட்டோம். சேதனப் பசளைகளைத்தான் வழங்கவிருக்கின்றோம். விவசாயிகள் யாரும் இதற்காக பயப்படவேண்டாம். உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் உதவுவதற்கு அரசாங்கம் இருக்கின்றது. உரிய நேரத்திற்கு பசளைகளை நாங்கள் வழங்குவோம்.
இன்னும் பத்துவருடங்களுக்கு நாங்கள் இரசாயணப்பசளைகளை உபயோகித்தோமானால் எங்களுக்கு பெரிய பிரச்சினைகள் ஏற்படும். ஆரம்பத்தில் நாட்டில் ஒரு புற்றுநோய் வைத்தியசாலை தான் இருந்தது. தற்போது பல புற்றுநோய் வைத்தியசாலைகள் இயங்குகின்றன.

தற்போது அனைத்து வைத்தியசாலைகளிலும் சிறுநீரகபிரிவுள்ளது. இதற்கெல்லாம் காரணம் நாங்கள் இரசாயணப்பசளைகளை உபயோகித்ததுதான். ஆகவே இதனை நிறுத்துவதற்கு இந்த அரசாங்கம் முடிவு செய்ததே உங்களுக்காகத்தான்.

Leave A Reply

Your email address will not be published.