நல்லாட்சி அரசு போல் தமிழர்களை ஒருபோதும் ஏமாற்றாது கோட்டாபய அரசு! தினேஷ் தெரிவிப்பு.

“கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தியது. கோட்டாபய அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது; தமிழ் மக்களை வைத்து அரசியல் நடத்தாது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் அரசு அதீத அக்கறை கொண்டுள்ளது.”

இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மரணதண்டனைக் கைதி துமிந்த சில்வாவைப் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ததை மூடிமறைப்பதற்காகவே தமிழ் அரசியல் கைதிகளில் 16 பேரை ஜனாதிபதி விடுதலை செய்தார் என்று எதிரணியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அரசு அடியோடு நிராகரிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“புதிய அரசு பதவியேற்ற நாள் தொடக்கம் துமிந்த சில்வாவைப் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட மக்கள், ஆளும் கட்சியினர் மட்டுமல்ல எதிரணியினர் கூட ஜனாதிபதியிடம் எழுத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கடந்த ஆட்சியில் அரசியல் அழுத்தம் காரணமாகவே துமிந்த சில்வா மரணதண்டனைக் கைதியானார்.

தண்டனைக்காலம் நிறைவடையவுள்ள நிலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், இது தமிழர்களை ஏமாற்றும் செயல் என்றும் தமிழ் அரசியல்வாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களையும் அரசு அடியோடு நிராகரிக்கின்றது.

கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தியது. கோட்டாபய அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது; தமிழ் மக்களை வைத்து அரசியல் நடத்தாது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் அரசு அதீத அக்கறை கொண்டுள்ளது. அதை வெளிப்படுத்தும் முதல் சமிக்ஞையாகவே தமிழ் அரசியல் கைதிகள் 16 பேரை பொதுமன்னிப்பின் கீழ் ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார். சிறையிலுள்ள ஏனைய அரசியல் கைதிகளையும் விடுவிக்கும் நடவடிக்கையை அரசு முன்னெடுக்கும்.

அதேவேளை, தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கும். எனவே, அரசை தமிழ் மக்கள் நம்ப வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.