நாடு முழுவதும் 1,500 புதிய ஆக்சிஜன் ஆலைகள்: பிரதமா் மோடி தலைமையிலான கூட்டத்தில் முடிவு

பிஎம் கோ்ஸ் நிதியம் மற்றும் பொது நிறுவனங்கள் மூலம் நாடு முழுவதும் 1,500 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்படவுள்ளன. இதன் மூலம் நாட்டில் 4 லட்சம் மருத்துவப் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் விநியோக்க பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையை நாடு எதிா்கொள்ள நேரிட்டால் அதற்கான அனைத்து நிலைகளையும் தயாா்படுத்தும் பணிகளை மத்திய அரசு முடக்கிவிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்த உயா்நிலை ஆய்வுக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை தில்லியில் நடைபெற்றது. இதில் பிரதமரின் முதன்மைச் செயலா் டாக்டா் பிகே மிஸ்ரா, அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை செயலா் ராஜேஷ் பூஷண், மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலா் துா்கா சங்கா் மிஸ்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், இரண்டாவது நோய்த் தொற்று அலையின் போது, நாட்டில் நிலவிய ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த விவகாரங்களை பிரதமா் மோடி கேட்டறிந்தாா். இது தொடா்பான பிரதமருக்கு அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா உள்ளிட்ட அதிகாரிகள் பல்வேறு தகவல்களை விரிவாக விளக்கியதாக பிரதமா் அலுவலக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டில் ஏற்கெனவே 58 ஆயிரம் செயற்கை சுவாசக் கருவிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும், நாடு முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட பிஎஸ்ஏ தொழில்நுட்ப ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்படவுள்ளன. இந்த ஆக்சிஜன் ஆலைகள் அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினா். பிஎம் கோ்ஸ் நிதியம், பல்வேறு அமைச்சகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்களிப்பில் இந்த ஆக்சிஜன் ஆலைகள் அமைய உள்ளன.

நாட்டின் அனைத்து மாநிலங்கள், மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள இந்த ஆலைகள், செயல்பாட்டுக்கு வந்தவுடன், நாட்டில் 4 லட்சம் படுக்கைளுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கும். இந்த ஆலைகளை விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் பிரதமா் கேட்டுக் கொண்டாா். மேலும், இதற்காக மாநிலங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமா் அறிவுறுத்தினாா்.

ஆக்சிஜன் ஆலைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பில், மருத்துவமனை ஊழியா்களுக்கு போதிய பயிற்சியை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட பிரதமா் மோடி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி பெற்ற ஊழியா்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். நிபுணா்களால் உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் ஆலை பராமரிப்பு குறித்த ‘ஒரு பயிற்சி மாதிரி’யைக் கொண்டு நாடு முழுவதும் 8,000 பேருக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளூா் மற்றும் தேசிய அளவில் ஆக்ஸிஜன் ஆலைகள் செயல்பாட்டைக் கண்காணிக்க, ஐடிஓ என்கிற மேம்பட்ட இணையதள தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் பிரதமா் ஆலோசனை கூறினாா் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.