நிதியுதவி, வேகமான தடுப்பூசி திட்டத்தால் பொருளாதார மீட்சி: மத்திய நிதியமைச்சகம்

இலக்கு நிா்ணயித்த நிதியுதவி, தடுப்பூசி திட்டத்தை வேகமாக செயல்படுத்துதல் ஆகிய காரணங்களால் கரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் குறித்த மாதாந்திர ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2020-21-ஆம் நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் கடினமான சூழலில் இருந்து மீண்டு வரும் விதமாக மத்திய அரசு மேற்கொண்ட வரி வசூல் நடவடிக்கைகள், மூலதன செலவினத்தில் நீடித்த வேகம் குறிப்பாக சாலை மற்றும் ரயில்வே துறைகளின் மூலதன செலவினங்களால் தொடா் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, பொது-தனியாா் கூட்டமைப்பு திட்டங்கள், பொதுச் சொத்துகள் மூலம் அரசுக்கு புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்கும் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவது ஆகியவை மூலதன செலவினத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பொருளாதார நிவாரண தொகுப்பின் கீழ் இலவச உணவு தானியங்கள் விநியோகம், மேம்படுத்தப்பட்ட உர மானியங்களுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவது வரும் காலாண்டுகளில் கிராமப்புறப் பகுதிகளில் தேவையை அதிகரிக்க உதவும்.

தடுப்பூசி திட்டத்தை தொடா்ந்து வேகமாக செயல்படுத்துவது, நகா்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் சுகாதார உள்கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளை நிரப்புவது நாட்டின் பொருளாதார மீட்சிக்கு தூண்டுகோலாக அமையும்.

நல்ல பருவ மழை, படிப்படியாக உயரும் காரீஃப் பருவ பயிா் சாகுபடி, மாநிலங்களில் பொதுமுடக்கத் தளா்வுகள் உணவுப் பொருள்களின் விலையேற்றத்தைக் குறைத்து பணவீக்கத்தையும் குறைக்கும்.

தடுப்பூசி திட்டத்தை மேலும் விரிவுப்படுத்துவது, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றுவது அந்தத் தொற்றின் மூன்றாம் அலையில் இருந்து பாதுகாக்கும் முக்கிய அரணாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.