அரசியல் தேவைக்காகவே ஆசிரியர்கள் போராட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா குற்றச்சாட்டு.

அரசியல் கட்சிகளின் தேவைக்கேற்ப, அவர்களின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் குறுகிய நோக்கம்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்களை வலியுறுத்தியுள்ளார் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் சுகாதார நடைமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, தனிமைப்படுத்தல் எவர் மீறினாலும் தராதரம் பாராது அவர்களுக்கு எதிராகப் பொலிஸார் சட்டத்தைச் செயற்படுத்துவார்கள்.

ஆசிரியர் சங்கத்தின் பிரதானியே வீதியில் இறங்கி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும்போது, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மாணவர்களுக்கு எவ்வாறு பணிப்புரை விடுப்பது?

அரசியல் கட்சிகளின் தேவைக்காக, அக்கட்சிகளின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் குறுகிய நோக்கம் கொண்ட குறித்த தொழிற்சங்கப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவரும் வரை நிறுத்துமாறு கோருகின்றோம்” – என்றார்.

ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தியும், இலவசக் கல்வியைப் பாதுகாக்கும் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுப் பலவந்த தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனைக் கண்டித்தும், அவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் இணைய வழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து ஆசிரியர்கள் விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.