ஏடிஎம் வருபவர்களுக்கு உதவுவது போல் நாடகம் – தேனியில் பணத்தை சுருட்டி வந்த இளைஞர் போலீசில் சிக்கினார்

பெரியகுளம் அருகே ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க வந்த நபர்களிடம் உதவி செய்வதாகக் கூறி தொடர் மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணை காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன்(49). இவர் தனது நண்பர் நாகராஜூடன், தேவதானப்பட்டி பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதற்காக நேற்று வந்துள்ளார். அப்போது மிஷினில் இருந்து ரூபாய் 10,000 பணம் எடுத்துத் தருமாறு அங்கிருந்த இளைஞர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார். முருகேசனின் ஏ.டி.எம் கார்டு மற்றும் பாஸ்வேர்டை பெற்றுக் கொண்ட அந்த இளைஞர், தலா ரூபாய் 5,000 என இரண்டு முறை பத்தாயிரம் எடுத்துக் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட முருகேசன் வீட்டிற்குச் சென்ற பிறகு தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 14,000 பணம் எடுத்திருப்பதாக மொபைல் எண்ணிற்கு வந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக விரைந்து அதே ஏ.டி.எம். சென்டரில் தனது கணக்கினை பரிசோதனை செய்ததில் அதில் ரூ.14,000 எடுக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து தன்னிடம் பணம் எடுத்துத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் மீது தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் முருகேசன் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று மீண்டும் தேவதானப்பட்டியில் உள்ள ஏ.டி.எம். சென்டருக்கு வந்த முருகேசன் அங்கு உலாவிக் கொண்டிருந்த மோசடி இளைஞரை கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதில் தேவதானப்பட்டி அருகே உள்ள காமக்காபட்டி அம்சாபுரத்தைச் சேர்ந்த காமேஸ்வரன்(24) எனவும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 2முறை தலா 5,000 என பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து முருகேசனிடம் கொடுத்து அனுப்பிய பிறகு 3வது முறையாக ரூபாய் நான்காயிரத்தை தான் எடுத்துக் கொண்டதை அவர் ஒத்துக் கொண்டுள்ளார்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் இதே போன்று தேவதானப்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஆண்டிபட்டியில் உள்ள தனது உறவினர் செல்வக்குமாரின் வங்கிக் கணக்கில் ரூபாய் 1,200 பணத்தை இயந்திரத்தின் மூலம் செலுத்துவதற்கு அங்கிருந்த காமேஸ்வரனிடம் உதவியை நாடியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட காமேஸ்வரன் அதனை தனது வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு அங்கிருந்த வேறொரு ரசீதை எடுத்து பணம் போட்டதற்கான ரசீதாக கொடுத்து ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து முருகேசனிடம் மோசடி செய்த பணம் ரூபாய் நான்காயிரத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் காமேஸ்வரனை கைது நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.ஏ.டி.எம் சென்டர்களில் பணம் எடுக்க வருபவர்களிடம் உதவி செய்வது போல நடித்து தொடர் மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.