அரசியல் தீர்வு தேவையெனில் ஐ.தே.கவுக்கே வாக்களியுங்கள் : ரணில்

“நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூவினத்தவர்களும் விரும்பும் அரசியல் தீர்வு வேண்டுமெனில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டுவைக்கும் நிகழ்வு நேற்று (16) மாலை கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சித் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடு கொரோனா வைரஸ் பரவலுக்கு முகங்கொடுத்திருப்பதுடன் பாரியதொரு பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொண்டிருக்கும் நிலையில், அவற்றுக்கான தீர்வை எட்டுவதற்கான பிரகடனமே இன்று எமது கட்சியால் வெளியிட்டுவைக்கப்பட்டிருக்கின்றது. தற்போது கொரோனா வைரஸ் பரவலும், பொருளாதார நெருக்கடியுமே நாட்டில் காணப்படும் மிகப்பிரதானமான பிரச்சினைகளாகும். கொரோனா வைரஸ் இன்னமும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கின்றது. அதனைக் கட்டுப்படுத்தாமல் நாடு என்ற வகையில் நாம் முன்னோக்கிச் செல்ல முடியாது.

அதேபோன்று மற்றொரு புறத்தில் கொரோனா பரவலால் உலகலாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு எமது நாடும் முகங்கொடுத்திருக்கின்றது. எனினும், அரசால் இதற்குத் தீர்வுகாண முடியவில்லை. எதிர்வரும் பொதுத்தேர்தலின் ஊடாக ஆட்சியமைத்து வீட்டுப்பொருளாதாரத்தை சீரமைத்து, அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே எமது மிகமுக்கிய இலக்காக இருக்கின்றது.

மக்களை எமக்கு வாக்களிக்குமாறு கோருவதற்கு முன்னர், நாம் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதனூடாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் செயற்திட்டங்களை மக்களிடம் சமர்ப்பிப்பது அவசியமாகும்.

அரசு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திவிட்டது எனக் குறிப்பிட்டது. ஆனால், உண்மையில் இன்னமும் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை. அதேபோன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரஸ் பரவலையடுத்து மக்கள் எதிர்கொண்ட நெருக்கடி நிலைமைக்குத் தீர்வை வழங்கும் வகையில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. எனினும், எமது நாட்டில் அரசு அத்தகைய செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை. இறுதியில் நாட்டு மக்களும் உலக நாடுகளும் அரசின் மீது நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இத்தகையதொரு சூழ்நிலையில் இவையனைத்திலிருந்தும் மீள்வதற்கான திட்டங்கள் அடங்கிய பிரகடனத்தைப் பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசைத் தவிர்ந்த கட்சிகளில் நாமே முதலாவதாக சமர்ப்பித்திருக்கின்றோம்.

அந்தவகையில் எதிர்வரும் வருடங்களில் எமது நாட்டில் சுமார் 10 இலட்சம் பேர் வேலைவாய்ப்பின்றி இருக்கும் நிலையேற்படும். எதிர்வரும் பொதுத்தேர்தலில் நாங்கள் அரசு அமைக்கும் பட்சத்தில் அவர்களுக்கான நிவாரணக் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதேவேளை, அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் பாரிய வணிகங்கள் மற்றும் வியாபாரங்களை மேம்படுத்துவதற்கான கடன் உதவிகளை வழங்குவோம். மேலும் தனியார்துறையினர், ஏற்றுமதி, ஆடையுற்பத்தித்துறை, சுற்றுலாத்துறை போன்றவற்றையும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

குறிப்பாக விவசாயம், மீன்பிடித்துறைகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான புதிய செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தும் அதேவேளை, உணவு உற்பத்தியில் சுயதேவைப்பூர்த்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது இலக்காக இருக்கின்றது. நாட்டிலேயே உற்பத்தியை அதிகரிப்பதன் காரணமாக உணவுப்பொருட்களின் விலைகளைக் குறைத்து, மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியும். அதுமாத்திரமன்றி ‘சுவசரிய’ அம்புலன்ஸ் சேவையின் இரண்டாம் கட்ட செயலாக்கத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிடபட்டுள்ளது.

அதனூடாக நாட்டின் சுகாதார சேவையை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும்.
அடுத்ததாக தற்போது நாடு எதிர்கொண்டிருக்கும் முக்கிய சவாலாக கொரோனா வைரஸ் பரவல் காணப்படுகின்றது. தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண்பதற்கு நாளொன்றுக்கு 5000 பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கடந்த காலத்திலிருந்து நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

அதேபோன்று தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான செயற்கை சுவாசமளிக்கும் கருவிகளும் எமக்கு அதிகளவில் தேவைப்படுகின்றன. இவையனைத்தையும் கருத்தில்கொண்டு நாம் திட்டங்களை வகுத்திருக்கின்றோம்.

இவையனைத்துக்கும் மேலாக நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, அதேவழிமுறையில் ஆட்சிசெய்வதுடன் சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாமல் செய்வதற்கு எவ்வித அரசமைப்புத் திருத்தங்களையும் கொண்டுவரமாட்டோம். நாட்டை முன்னேற்றுவதற்கு தனியொரு கட்சி மாத்திரமன்றி, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மாதமொருமுறை சந்தித்து, நாட்டின் முன்னேற்றம் மற்றும் அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான புதிய செயன்முறையொன்றை ஆரம்பிப்போம்.

மேலும், நாமனைவரும் இலங்கையர் என்ற வகையில் ஒரே நாடாக ஒன்றிணைந்து முன்நோக்கிப் பயணிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவமே மிகவும் முக்கியமானதாகும்” – என்றார் .

Comments are closed.