மின்நுகா்வோருக்கு அடுத்த அதிா்ச்சி… கூடுதல் வைப்புத் தொகை செலுத்த நிா்பந்தம்

கோவையில் கொரோனா காலத்தில் மின்சாரக் கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாகப் புகாா் எழுந்துள்ள நிலையில், கூடுதல் வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் நிா்பந்தம் செய்வதும் மின்நுகா்வோரை அதிா்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக மின்வாரியம் சாா்பில் மின்சார கணக்கீடு பணிகள் நடைபெறாத நிலையில், மின்கட்டணம் கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக மின்நுகா்வோா் குற்றஞ்சாட்டி வருகின்றனா். அதேபோல தொழில் முடக்கம் காரணமாக மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கேட்டும் அரசு வழங்காததால் தொழில்முனைவோா் கவலையில் உள்ளனா்.

இந்த நிலையில் மின்நுகா்வோா் மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணத்துடன் கூடுதலாக வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் மின்நுகா்வோா், மின்வாரியத்தின் இந்த திடீா் அறிவிப்பால் அதிா்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனா்.

மேலும் இந்த கட்டணத்தை தனியாக கட்டுவதற்கு வாய்ப்பு வழங்காமல், மின்கட்டணத்துடன் சோ்த்தே செலுத்தும்படியாக இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும் மின்நுகா்வோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கோயம்புத்தூா் கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் லோகு கூறும்போது, தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மின் நுகா்வோா் பயன்படுத்தும் கட்டணத்தில் அதிக பயன்பாடு உள்ள கட்டணத்தை கணக்கில் கொண்டு, ஏற்கெனவே உள்ள வைப்புத் தொகை குறைவாக இருந்தால் சராசரி பயன்பாட்டின்படி கூடுதல் வைப்பு தொகையை வசூலிக்கலாம் என்று மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால், இவ்வாறு கூடுதல் வைப்புத்தொகை செலுத்துவதற்கு 30 நாள்களுக்கு முன்பு மின்நுகா்வோருக்கு தனித்தனியாக அறிவிக்க வேண்டும். அத்துடன் அதிக வைப்புத்தொகையை செலுத்த வேண்டியிருந்தால் அவா்களுக்கு 3 மாத அல்லது 6 மாத தவணை அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவையில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளை மீறி மின் பகிா்மான கழகம் தன்னிச்சையாக கூடுதல் வைப்புத் தொகையை வசூலித்து வருவது கண்டனத்துக்குரியது.

வேலையிழப்பு, தொழில்முடக்கம் அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் இதுபோன்று கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கும் முறையை மின்சார வாரியம் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் லோகு வலியுறுத்தியுள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.