போட்டியிடத் தைரியம் இல்லாதவர்களே தேர்தலை ஒத்திவைக்கக் கோருகின்றனர் : சுசில் பிரேமஜயந்த

போட்டியிடத் தைரியம் இல்லாதவர்களே பொதுத்தேர்தலை ஒத்திவைக்குமாறு கோருகின்றனர் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொதுத்தேர்தலைத் தொடர்ந்தும் பிற்போட்டால் நாட்டில் அரசமைப்பு ரீதியில் பாரிய நெருக்கடி ஏற்படும். கொரோனா வைரஸ் பரவலைக் காரணம் காட்டி ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலைப் பிற்போடுமாறு எதிர்த்தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். தேர்தலில் வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளார்கள். போட்டியிடத் தைரியம் இல்லாதவர்களே தேர்தலைப் பிற்போடுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று சமூக தொற்றாக பரவலடையவில்லை என்பதை சுகாதாரத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளார்கள். பொதுத்தேர்தலைத் தொடர்ந்து பிற்போட்டால் நாட்டில் அரசமைப்பு ரீதியான நெருக்கடிகள் ஏற்படும்.

ஆகவே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் பொறுப்புடன் கருத்துரைக்க வேண்டும்” – என்றார்.

Comments are closed.