கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கால் இதுவரை 6 பேர் உயிரிழப்பு!

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்துபெய்து வரும் கனமழை வெள்ளபெருக்கால் இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு 216 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 5 நாட்களாக பெய்துவரும் கனமழையால் பெலகாவி, கல்புர்கி, சிமோகா சிக்கமகளூரு, தார்வாட், பாகல்கோட்டே, விஜயபுரா உள்ளிட்ட 13 மாவட்டங்கள் வெள்ள பாதிப்பில் சிக்கித் தவித்து வருகின்றன.

கிருஷ்ணா, பீமா, நாராயணபுரா, துங்கபத்ரா,கட்டபிரபா ஆகிய நதிகளில் அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளன. கடந்த மூன்று நாட்களில் வெள்ள பாதிப்பிற்கு 6 பேர் மாநிலத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீக்கப்பட்டு 216 வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மாவட்ட நிர்வாகம் இவர்களுடன் இராணுவமும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

வட கர்நாடக மாவட்டங்களான பெலகாவி சிமோகா தார்வாட் ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ள பாதிப்பால் நூற்றுக்கணக்கான வீடுகள் இதுவரை இடிந்து விழுந்துள்ளது. பல நூறு கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுள்ளன.

பெங்களூரு பூனே தேசிய நெடுஞ்சாலை மூன்றாவது நாளாக மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது வருடமாக வட கர்நாடக மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருவது பதிவாகி உள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு கூட இதுவரை முழுமையான நிவாரணம் கர்நாடக அரசால் வழங்கப்படாத நிலையில் தொடர்ந்து நான்காவது முறையாக வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறது வட கர்நாடக மாவட்டங்கள்.

இந்நிலையில் நாளை பெலகாவி உள்ளிட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளை கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். வெள்ள பாதிப்பை பார்வையிட செல்லும் முதல்வர் எடியூரப்பா பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சம்பவ இடத்திலேயே நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.