கேரள கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் நோய் தாக்குதல்: தமிழக பண்ணையாளர்கள் பீதி

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளதால் தமிழக கோழிப்பண்ணையாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூரா சுண்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கோழிப் பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென கொத்துக்கொத்தாக இறந்தன. இது குறித்து அறிந்ததும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.

இறந்த கோழிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருவனந்தபுரம் ஆலப்புழாவில் உள்ள பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் கோழிகள் இறந்ததற்கு பறவைக்காய்ச்சல் தான் காரணம் என தெரிய வந்துள்ளது.

மேலும் கூடுதல் பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள உயர் தொழில்நுட்ப பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா, ஜிகா வைரஸ் என அச்சத்தில் வாழும் கேரள மக்களுக்கு அடுத்து பறவை காய்ச்சல் பரவல் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோழிகள் இறந்த பண்ணையில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து கோழிப் பண்ணைகளையும் மூடி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் ஏற்கனவே உயிர் பாதுகாப்பு முறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதால், இங்கு பறவைக்காய்ச்சல் நோய் பரவ வாய்ப்பில்லை என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.