சுகாதார விதிமுறைகளை பின்பற்றிச் செயற்படவும்! பொலிஸ் பேச்சாளர் வேண்டுகோள்.

“நீண்ட நாட்களுக்குப் பின்னர் அரச சேவை இன்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில், பொதுப்போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்துபவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்பட வேண்டியது மிகவும் அவசியம்.”

இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தூரப் பிரதேசங்களைச் சேர்ந்த அரச சேவையாளர்கள் பணிக்குத் திரும்பி வருகின்றனர்.

அரச சேவையாளர்களின் நன்மை கருதி பொதுப் போக்குவரத்துச் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசேடமாக பொலிஸ் தலைமையகத்தால் விசேட அறிவிப்பு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

அலுவலகப் பணிகளுக்காக வரும் சேவையாளர்கள், அத்தியாவசியத் தேவைக்காக பயணிப்பவர்கள் ஆகியோருக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாது அவர்களது சேவைக்குச் செல்வதற்கு அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று மாகாண எல்லைகளில் வைக்கப்பட்டுள்ள வீதித்டைகள், ஏனைய பிரதான வீதிகளில் வைக்கப்பட்டுள்ள வீதித் தடைகளில் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாது அவர்கள் பயணிப்பதற்குப் பொலிஸார் அனுமதி வழங்கி வருகின்றனர்.

ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நிறுவனமொன்றில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காகக் குறித்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக வருபவர்களுக்கு, அதற்கான ஆவணங்களை வழங்குவதற்கு ஒத்துழைக்குமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுப்போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்தும்போது சுகாதார அமைச்சால் விடுக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் செயற்படுமாறு பயணிகளுக்கும் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடுபவர்களுக்கும் அறிவுறுத்துகின்றோம்.

சகல சந்தர்ப்பங்களிலும் முகக்கவசங்களை அணிந்திருப்பது அவசியம்.

சுகாதார விதிமுறைகளை மீறி பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.