மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழா (15.08.2021)

மரியன்னையின் விண்ணேற்பு விழா என்பது உலகிலுள்ள அனைத்துக் கத்தோலிக்கர்களாலும் கொண்டாடப்படும் ஒரு விழா. இயேசு கிறிஸ்து தனது தாயாரை நம் அனைவருக்கும் தாயாக இவ்வுலகில் விட்டுச் சென்றார்.

ஆவணி 15 திருச்சபை கொண்டாடும் மரியாளின் விண்ணேற்பு விழா திருச்சபையால் அங்கீகரிக்கப்பட் 4 மரியன்னை கோட்பாடுகளுள் ஒன்று. அன்னை மரியாள் இறைவனின் தாய், அன்னை மரியாள் என்றும் கன்னி மற்றும் அன்னை மரியாள் அமல உற்பவி போன்றவை மற்ற மூன்று மரியன்னை கோட்பாடுகளாகும்.

அன்னை மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாள் என்ற இந்த மறைக்கோட்பாடானது திருத்தந்தை 12-ஆம் பத்திநாதரால் 1950-ஆம் ஆண்டுதான் அறிவிக்கப்பட்டது என்றாலும்கூட இது உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் அதற்கு முன்பே ஏற்றுக்கொள்ளப்பட்டு விசுவசிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்ட ஒரு விழாவாக இருந்து வந்துள்ளது.

இந்த விழாவனது அப்போஸ்தலாகளுடைய காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வந்ததாக மரியில் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். எந்தவொரு மரியில் சிந்தனையும் வழிபாடும் விழாவும் கோட்பாடும் கிறிஸ்தியலை மையமாகக் கொண்டதாகும். இந்த உலகை மீட்பதற்கான மீட்புப் பணியில் கிறிஸ்துவோடு இணைந்து செயல்பட அழைக்கப்பட்ட மரியாளை அவளுடைய பிறப்பிலிருந்தே அதற்கென முன்குறித்து ஆதிப்பாவம் இல்லாமல் அமல உற்பவியாக உருவாக்கிய இறைவன் கிறிஸ்துவினுடைய மீட்பிலும் சிறப்பான விதத்தில் பங்கு கொள்ளச் செய்கின்றார். இது அவள் கிறிஸ்துவினுடைய பிறப்பு, பணிவாழ்வு, சிலுவைப் பயணம், இறப்பு மற்றும் திருச்சபையின் பிறப்பில் தன்னையே முழுமையாக இணைத்துக்கொண்டு பணியாற்றியதால் இறைவனால்; அவளுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்புப் பரிசு அல்லது சலுகையாகும்.

மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் வானகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டாள் என்று இந்த மரியன்னைக் கோட்பாடு கூறுகின்றது அப்படியென்றால் மரியாள் இறக்கவில்லையா?
மரியாளுடைய பூவுலக வாழ்வின் முடிவைப் பொருத்தவரையில், புதிய ஏற்பாட்டில் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, இதைக் குறித்த இரு வேறுபட்ட கருத்துக்கள் திருச்சபையின் தொடக்கம் முதலே, திருச்சபைத் தந்தையர்களாலும் இறையியல் மற்றும் மரியியல் வல்லுநர்களாலும் விவாதிக்கப்பட்டு வந்தன. கிழக்கத்தியத் திருச்சபையில் இவ்விழாவனது மரியாளின் உறக்கம் அதாவது Dormition of Mary என்று கொண்டாடப்பட்டு வந்தது. அதாவது மரியாள் மரணத்தின் வேதனைகளை அனுபவிக்காமல் ஆழ்நிலை உறக்கத்தில் இருந்தபொழுது (கிறிஸ்தவர்கiளுக்கு மரணம் என்பது உயிர்ப்புக்கு முந்தைய ஆழ்நிலை உறக்கம்தான்) வானதூதர்கள் புடைசூழ கிறிஸ்து வந்து மரியாளின் ஆன்மாவை விண்ணகத்திற்கு எடுத்துச் சென்றார் என்பதை மையமாக வைத்து அவ்விழாவைக் கொண்டாடுகின்றார்கள்.

மேற்கத்திய திருச்சபையானது மரியாளின் விண்ணேற்பை, மரியாள் உடவோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டாள் என்று அறிவித்து இந்த விழாவைக் கொண்டாடுகின்றது. பல்நெடுங்காலமாக மக்களால் உறுதியாக நம்பப்பட்டு கொண்டாடப்பட்டுவந்த இவ்விழாவனது, 1950ஆம் ஆண்டில்தான் திருத்தந்தை 12வது பத்திநாதருடைய Munificentissimus Deus என்கின்ற மரியியல் கோட்பாட்டின் வழியாக திருச்சபையால் முறைப்படி அங்கீகர்கப்பட்டு அறிவிக்கப்படுகின்றது. இக்கோட்பாட்டில் திருத்தந்தை அவர்கள் மரியாளுடைய விண்ணேற்பானது அவளுடைய இறப்பிற்குப்பின் நிகழ்ந்ததா அல்லது உயிரோடிருக்கும்பொழுதே நடந்ததா என்பது பற்றிய விவாதத்தைத் தவிர்த்து, மக்களுடைய நம்பிக்கையை “வெளிப்படுத்தப்பட்ட உண்மையாக” (Revealed Truth) ஏற்றுக்கொண்டு மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ப்பட்டாள் என்று அறிவிக்கின்றார்.

இறுதியாக, அவளுடைய விண்ணேற்புப் பற்றிய மறைக்கொள்கை வரைவு (Dogma of the Assumption) பற்றிய தனது மடலில் இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமானது இவ்வாறு கூறுகின்றது:
‘இறுதியாக மாசற்ற கன்னி ஆதிப் பாவக்கறை எதுவுமின்றிப் பாதுகாக்கப்பெற்று, தம் மண்ணுலக வாழ்வு நிறைவுற்றதும் ஆன்மாவோடும் உடலோடும் விண்ணுலக மாட்சிக்கு எடுத்துச் செல்லப்பெற்றார்; அனைத்துலக அரசியாக கடவுளால் உயர்த்தப்பெற்றார் (Lumen Gentium, n.59). இந்தத் தொகுப்போடு, திருத்தந்தை 12-ஆம் பத்திநாதருடைய போதனையைப் பின்பற்றி, திருச்சபை பற்றிய சங்க ஏடானது, மரியாளுடைய இறப்பு பற்றிய கேள்விக்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வமான பதிலும் கொடுக்கவில்லை. எனினும், திருத்தந்தை 12-ஆம் பத்திநாதர், அவளுடைய இறப்பு பற்றிய உண்மையை மறுப்பதற்கும் முயலவில்லை, மாறாக, இறைவனுடைய தாயினுடைய இறப்பை எல்லா விசுவாசிகளாலும் ஏற்றுக்கொள்ப்பட்டதொரு உண்மையாக முறைப்படி அறிவிப்பதற்கான தருணமாக அவர் கருதவில்லை.

இதைக்குறித்து, 2 ஜீலை 1997 அன்றைய தனது மரியாள் பற்றிய தனது மறைக்கல்வியில், திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் இவ்வாறு கூறுகின்றார்.

“உண்மையில் சில இறையியலாளர்கள், கன்னி மரியாள் இறக்கவில்லை மேலும்; வாழ்வின் முடிவில் பூவுலகிலிருந்து உடனடியாக வானகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாள் என்ற கருத்தை நிலைநிறுத்தினார்கள். இருப்பினும், இந்தக் கருத்தானது 17 ஆவது நூற்றாண்டுவரை அறியப்படாமல் இருந்தது, அப்படி இருக்கையில்;, உண்மையில் மரியாளுடைய இறப்பை அவளுடைய விண்ணக மகிமைக்கானதொரு நுழைவாயிலாகப் பார்க்கின்ற பொதுவானதொரு பாரம்பரியமும்; இருக்கின்றது.

நாசரேத்து மரியாள் அவளுடைய சதையில் (உடலில்) மரணத்தை அனுபவித்திருக்க முடியுமா? அவளுடைய மகனோடு மரியாளுக்கிருந்த தொடர்பையும் அவளுடைய முடிவையும் தியானிக்கையில், ஆம் என்று பதிலளிப்பதே முறையானதொன்றாகத் தோன்றுகின்றது. இயேசு கிறிஸ்து இறந்ததனால், அவருடைய தாய்க்கு அதற்கெதிரானதொரு நிலைப்பாட்டை எடுப்பது மிகவும் கடினமானதொன்றாகும்.

இதைப் பொருத்தவரையில் எந்த ஒரு சந்தேகத்தையும் கொண்டிராத திருச்சபைத் தந்தையர்களும் இந்தக் கோணத்தில்தான சிந்தித்தார்கள். புனிதர் சாருக் நகரத்து ஜேக்கப் என்பவர், மரியாளுக்கு காலம் நிறைவுற்றபோது “எல்லாத் தலைமுறையினருடைய வழியில் நடப்பதற்கு” இறப்பின் பாதையில், “ஆசீர்வதிக்கப்பட்டவளுடைய உடலை அடக்கம் செய்வதற்கு பன்னிரெண்டு அப்போஸ்தலர்களுடைய குழுவானது”ஒன்று கூடியது என்று கூறுகின்றார் (Discourse on the burial of the Holy Mother of God, 87-99 in C. Vona, Lateranum). ஜெருசலேம் நகரத்து புனிதர் மொதெஸ்துஸ் (ன.634) என்பவர், “மகிமைமிக்க இறைவனுடைய தாயின் புனித உறக்கம்”பற்றிய மிக நெடிய விவாதத்திற்குப்பிறகு, “அவளை அவளுடைய கல்லறையிலிருந்து எழுப்பி அவளையும் அவருடைய மகிமையில் பங்குபெற அவரோடு எடுத்துச் செல்வதற்கான” கிறிஸ்துவினுடைய அதிசயிக்கத்தக்க இடையீட்டை புகழ்ந்து அவருடைய புகழ்ச்சியுரையை முடிக்கின்றார் (Enc. In dormitionem Deiparae semperque Virginis Mariae, nn.7 and 14: PG 86bis 3293; 3311).
இவ்வாறு. பல்வேறுபட்ட கருத்துக்கள் மரியாளுடைய இறப்பு பற்றி இருந்தாலும், மரியாளுடைய இறப்பிற்கான சந்தர்ப்பங்கள் பற்றி எந்தவிதமான செய்தியையும் புதிய ஏற்பாடு தரவில்லை. குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு எவ்வித விளக்கமும் இல்லாத இந்த அமைதியானது, ஒருவரை அது இயற்கையாகவே நடந்தது என்று எண்ணுவதற்கு இட்டுச் செல்கின்றது. இவ்வாறு இல்லையெனில், எப்படி இதைப் பற்றிய செய்தியானது அவளுடைய சம காலத்தவரிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கக்கூடும் மற்றும் எவ்வாறு அது எதோ ஒரு வகையில் நமக்கு விட்டுச்செல்லப்படாமல் இருந்திருக்கக்கூடும்?

மரியாளுடைய இறப்பிற்கான காரணம் போலவே, இயற்கையான மரணத்திடமிருந்து அவளை விலக்கி வைக்க விரும்புகின்ற எண்ணமானது ஆதாரமற்றதொன்றாகவே தோன்றுகின்றது. இந்த உலகைவிட்டு அகன்று செல்லும் வேளையில் கன்னி மரியாளிடமிருந்த ஆன்மீக மனப்பான்மையை உற்று நோக்குவதென்பது மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. இதைப் பொருத்தவரையில், புனிதர் பிரான்சிஸ் தி சேல்ஸ் என்பவர் மரியாளுடைய இறப்பு அன்பினுடைய பரிமாற்றத்தினால் விளைந்ததொன்றாக இருக்கின்றது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். அவர் “அன்பின் வழியாக அன்பிலிருந்து அன்பில்” இறந்து, அவளுடைய மகன் இயேசுவின்மீது வைத்த அன்பினால் இறைவனின் தாயானவள் இறந்தாள் என்று சொல்லுமளவிற்கு அவர் செல்கின்றார் (Treatise on the Love of God: bk. 7: ch. XIII-XIV).

இந்த விழா நமக்குத் தரும் செய்தி என்ன?

அன்னை மரியாளைப் போன்று நாமும் இறைவனுக்குக் கீழ்படிந்து, அவருடைய வார்தைகளைத் தியானித்து அவருடைய விருப்பத்திற்கேற்ப வாழும்பொழுது நம்முடைய இறப்பிற்குப் பிறகு நாமும் உறுதியாக கிறிஸ்துவினுடைய மீட்பில் பங்கு கொள்வோம். கிறிஸ்துவை நம்புகிறவர்களுக்கு சாவு என்பது முடிவல்ல மாறாக விண்ணக வாழ்விற்கான வழி. நமது அன்னையினுடைய தாய்க்குரிய பரிந்துரையில் நம்பிக்கை வைத்து நமது விண்ணக வாழ்வின் நம்பிக்கையை உறுதிப்படுத்தவேண்டி;; கடவுளால் கொடுக்கப்பட்ட இந்த கிறிஸ்தவ வாழ்வை நம்பிக்கையோடு நன்கு வாழ்; நம்மை அவரிடம்; ஒப்படைப்போம். இது விண்ணகத்திற்கான ஒரு ஏக்கம் மட்டுமல்ல, இந்த உலக வாழ்வில் உயிரோட்டமான மற்றும் செயலாற்றுகின்ற கடவுளுக்கான தேடல், நம்மைச் சோர்ந்துபோகாத் திருப்பயணிகளாக மாற்றுகின்ற ஒரு தேடல்;, நம்மில் பலத்தையும் நம்பிக்கையில் உறுதியையும் ஊட்டுகின்ற தேடல், மற்றும் அன்பின் சக்தியாக இருந்து நம்மை பலப்படுத்துகின்றதொரு தேடல். மொத்தத்தில் நமது வாழ்வே ஒரு தேடல். எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனைத் தேடுகின்றவர்களுக்கு அவரை அன்பு செய்கின்றவர்களுக்கு முடிவில்லாத விண்ணக வாழ்வு நிச்சயம். நாம் நம்முடைய வாழ்வில் எதைத் தேடுகின்றோம். நம்முடைய வாழ்வின் இலக்கு என்ன என்பதைத் தீர்மானிப்போம். ஏத்தனை தடைகள் வந்தாலும் அன்னை மரியாளைப் போன்று என் ஆண்டவர் என்னைக் கைவிட மாட்டார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு பயணிப்போம். இறைவனுடைய ஆசீரும் அன்னை மரியாளுடைய பரிந்துரையும் நமக்கு என்றும் கிடைக்கும்.

– RK

Leave A Reply

Your email address will not be published.