சுததிரத்துக்காகப் போராடுகின்ற இனங்களுக்கு தலிபான்களின் விடுதலை சிறந்த எடுத்துக்காட்டு! நாடாளுமன்றில் சிறிதரன்.

“தலிபான்களின் தொடர் போராட்டமும் கொள்கைப்பிடிப்பும் இலக்கு நோக்கிய பயணமும் அவர்களை இன்று தமது தாய்நாட்டை அடைய வைத்திருக்கின்றது. தலிபான்களின் விடுதலை சரியா? பிழையா? என்பது பிரச்சினையல்ல. சுதந்திர இயக்கங்களுக்கும் சுதந்திரத்துக்குப் போராடுகின்ற இனங்களுக்கும் தலிபான்களின் விடுதலை ஒரு மாற்றத்தைத் தந்திருக்கின்றது.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா வைரஸ் தொற்று தற்காலிக ஏற்பாடுகள் சட்ட மூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த நாடு மிகப்பெரியதோர் அபாயத்துக்குள் சிக்கியிருக்கின்றது என்று கூறப்படுகின்றது. ஆனால், குருந்தூர்மலையிலே பிக்குகளும் இராணுவத்தினரும் பொலிஸாரும் சென்று பாரிய விகாரையை அமைக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பொன்னாலையில் சிறிய குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினைக்காக பொன்னாலை இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் சென்று அங்குள்ளவர்களை தாக்கியுள்ளனர். இவ்வாறு தாக்கும் அதிகாரத்தை யார் உங்களுக்கு தந்தது என்று அங்குள்ளவர்கள் கேட்டுள்ளனர்.

எங்கு பார்த்தாலும் இராணுவம் குவிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் மத்தியில் இராணுவ அச்சம் பிரயோகிக்கப்படுகின்றது.

இந்த நாட்டில் கொரோனா உள்ளது. அதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சரியான நிவாரணம் சென்றடைவதில்லை. இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் மீதான விசாரணைகள், நிலப்பறிப்புக்கள், அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள் தொடர்ந்தும் நடந்துகொண்டே இருக்கின்றன. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி கிடைக்கும்?

நாங்கள் கேட்பது இந்த நாட்டிலுள்ள தமிழர்கள் இந்த மண்ணுக்குரிய தனித்துவமான அடையாளத்துடன் கூடிய தேசிய இனம். 21ஆம் நூற்றாண்டில் தலிபான் இயக்கம் தன்னுடைய நாட்டை ஆயுத வழியில் வென்றுள்ளது. நாங்கள் ஆயுதம் பற்றிப் பேசவில்லை. எமது ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் 12 ஆண்டுகள் கடந்து பேசுகின்றோம். ஆனால், அமெரிக்கா விட்டுச் சென்றதால் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைப் பிடித்தார்கள், ரஷ்யா விட்டுச் சென்றதால் பிடித்தார்கள் என்பது பிரச்சினையல்ல. அவர்களின் தொடர் போராட்டமும் கொள்கைப்பிடிப்பும் அவர்களின் இலக்கு நோக்கிய பயணமும் அவர்களை இன்று தமது தாய்நாட்டை அடைய வைத்திருக்கின்றது .அந்த நாட் டை அவர்கள் மீடடெடுத்துள்ளனர்.

ஆகவே, நாங்கள் கேட்பது ஆயுத ரீதியான போராட்டத்தையல்ல. ஆனால், நாட்டில் புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கட்டும், பிரதமராக இருக்கட்டும் சிங்களத் தலைவர்களாக இருக்கட்டும். சற்று சிந்தியுங்கள். இன்று உலக ஒழுங்குகள் மாறுகின்றன. உலக சூழல் மாறுகின்றது. எத்தனையோ சுதந்திர இயக்கங்களுக்கும் சுதந்திரத்துக்குப் போராடுகின்ற இனங்களுக்கும் தலிபான்களின் விடுதலை ஒரு மாற்றத்தை தந்திருக்கின்றது. தலிபான்களின் விடுதலை என்பது சரியா? பிழையா? என்பதல்ல. ஆனால், அவர்களால் முடிந்திருக்கின்றது. ஒரு பெரிய நாட்டை அவர்களால் மீட்டெடுக்க முடிந்திருக்கின்றதெனில் அது ஒரு மாற்றம். இந்த உலக பந்தில் ஏற்பட்டிருக்கின்ற இராணுவ ரீதியிலான, ஆயுத ரீதியிலான ஒரு மாற்றம்.

அவர்கள் அந்த நாட்டைப் பிடித்து முதலில் தோற்றுப்போனவர்கள். இரண்டாவது தடவை ஆப்கானிஸ்தானைப் பிடித்துள்ளார்கள். இனி அவர்கள் செய்யப் போகின்ற ஆட்சி மக்கள் சார்ந்ததா, மக்களின் நலன் சார்ந்ததா என்பதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கைகள்தான் தீர்மானிக்கவேண்டும். ஆகவே, உலகப்பந்தில் எந்த இனமும் சுயத்துடன் வாழ்வதற்கான உரிமையை கோரி நிற்பதில் எந்தத் தவறும் இல்லை. தமிழர்களாகிய நாமும் எங்களது உரிமை தொடர்பில் இப்போதும் ஒரு நிலையான கொள்கையோடு இந்த அரசிடம் நீதி கேட்கின்றோம். தயவு செய்து இந்த அரசியல் கைதிகளையாவது நல்லெண்ண அடிப்படையில் பிணையிலாவது விடுவியுங்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.