மக்கள் பெரும்பாலானோர் விரும்பியுண்ணும் ஓர் சுவை மிகுந்த, பாகல் .

இது ஓர் சந்தைப்பெறுமதி கூடிய நீரிழிவு நோயாளிகள் உண்ணக்கூடிய, எமது இலங்கை மக்கள் பெரும்பாலானோர் விரும்பியுண்ணும் ஓர் சுவை மிகுந்த, பாகல் குடும்பத்தை சேர்ந்த ஓர் காயாகும்.
இது எமது கிழக்கு மாகாண மக்களால் “தும்பங்காய்” என்றும், வட மாகாணத்தில் “குருவித்தலைப் பாகற்காய்” என்றும் சிங்கள மக்களால் “தும்ப கரவில” (தும்பை பாகல்) என்றும் தமிழகத்தில் பழுப்பக்காய் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும்
கரையோர உலர்வலயத் தாவரமான இத் தும்பை முன்பெல்லாம் காடுகளில் விளைந்து ஓர் குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டுமே நகர்ப்புறங்களில் நுகரக்கூடிய காய்கறியாக காணப்பட்டது. தற்போது பரவலாக இது செய்கை பண்ணப்பட்டு இலங்கை முழுவதும் எல்லாப் பருவங்களிலும் ஓரளவு கிடைக்கிறது.

இவற்றை நஞ்சற்ற முறையில் எமது வீட்டுத்தோட்டத்தில் செய்கை பண்ண முடியும்.
இலங்கையில் சிபாரிசு செய்யப்பட்ட இனங்களாகத் தும்பிகா, விசல்கெசல், கோலிகா, F1 Hybrid என்ற இனங்கள் உள்ளன.
செடியின் 2 – 3 கணுக்கள் கொண்ட வெட்டுத் துண்டங்களை (Cuttings) 14 இன்ச் வளர்ப்புப் பையில் கொம்போஸ் மற்றும் மண் 1:1 விகிதத்தில் நிரப்பி பதியம் வைத்து கன்றுகளை உற்பத்தி செய்யலாம்.
விதை மூலம் நடுவதாயின் விதைகளை ஒரு குழியில் 4 விகிதம் நடவேண்டும்.
பின்னர் பூத்த பின் 8 – 10 பெண் தாவரத்திற்கு 1 ஆண் தாவரம் என நாற்றுகளை ஐதாக்க வேண்டும்.
கிழங்கு மூலம் கன்றுகள் பெறுவதாயின் 4 மாதத்தின் பின்னரே கிழங்கின் உறங்குநிலை நிறைவடையும் என்பதை கருத்தில் கொள்ளவும்.

ஆயினும் வெட்டுத்துண்டங்கள் (cuttings) மற்றும் கிழங்குகள் மூலம் பெற்ற கன்றுகளே விதைகளை விட வீரியம் மிக்கவை.
ஒக்டோபர் – நவம்பர்,
ஏப்ரல் – மே மாதங்கள் நடுவதற்கு ஏற்றவை.
5 அடி இடைவெளியில் வரிசைகளையும் 3.5 அடி இடைவெளியை தாவரங்களுக்கு இடையிலும் விட்டு நடவும்.
30 cm ஆழத்திற்கு மண்ணை கொத்திப் புரட்டி 30 cm x 30cm நீள அகலமுள்ள குழிகளில் கொம்போஸ், பசளை மண் இட்டு நன்றாக கலந்து கன்றுகளை நடவும். நடும்போது விவசாய போதனாசிரியரால் பரிந்துரைக்கப்படும் நஞ்சற்ற இயற்கை பங்கஸ் கொல்லிகள் அல்லது ஜீவாமிர்தம் கொடுக்கும் போது தாவரம் ஆரம்ப நோய்த்தாக்கமற்று வீரியமாக வளரும்.
நாற்று நட்டு இரு வாரங்கள் பின் சுமார் 2.5 மீட்டர் உயரமுள்ள உறுதியான கொழுகொம்புகளை வழங்கி இறந்த கொடிகளை அகற்றவும்.

தினமும் நீர் வழங்கவேண்டும். வரட்சி காலங்களில் மண்ணில் புதைத்த கொம்போஸ், நீரை பிடித்து வைத்துக்கொள்ளும்.
2ம் மற்றும் 4ம் கிழமைகளில் இயற்கைபசளை, ஜீவாமிர்தம் இடவும்.
இவ்வாறு செய்யும் போது பங்கஸ் தாக்கங்கள் கணிசமாகக் கட்டுப்படும்.
பாகற்காயை தாக்கும் பூச்சிகள், பழ ஈக்கள் தும்பையையும் தாக்குவதால் வாரமொருமுறை முடியுமானால் வாரம் இரு முறை இயற்கை பூச்சி விரட்டிகளான மூவிலை, ஐந்திலை பூச்சி விரட்டிகளையும் (நீம் அஸ்திரம், அக்கினி அஸ்திரம் ) அல்லது விவசாய போதனாசிரியரால் பரிந்துரைக்கப்படும் நஞ்சற்ற இயற்கை பூச்சி கொல்லிகளை பயன்படுத்த முடியும்.
விதை மூலம் பெற்ற நாற்றில் இருந்து 3 மாதத்தில் பூ வரும்.
கிழங்கு மூலம் பெற்ற நாற்றில் இருந்து 3,1/2 மாதத்தில் பூ வரும்.
பூத்து 2, 1/2 மாதத்தில் அடியிலுள்ள கொடிகளை நீக்கி விடவும்.
மாலை 7 – 8 மணி நேரத்தில் பூக்கள் விரியும். இதனால் இரவுநேரப் பூச்சிகளால் மகரந்த சேர்க்கை நடைபெறும்.
தற்போது பல விவசாயிகள் ஆண் பூக்களை பெண்பூக்களுடன் செயற்கை மகரந்த சேர்க்கை செய்வதன் மூலமும் விளைச்சலை அதிகரிக்கிறார்கள்.

மகரந்த சேர்க்கை செய்து 2 -3 கிழமையில் காய்கள் முதிர்ச்சி அடையும். ஆனாலும் விளைச்சல் அதிகரிக்க, 3 கிழமையில் காய்களை அறுவடை செய்யலாம்.
ஓர் பெண் தாவரக்கொடியில் 6 -8 Kg காய்களை வருடமொன்றுக்கு அறுவடை செய்யலாம்.
நாமும் இதனை நஞ்சற்ற முறையில் விவசாய போதனாசிரியர்களின் வழிகாட்டலில் எமது வீடுகளில் முயற்சிப்போம்.

Leave A Reply

Your email address will not be published.