ஆப்கனை ஆளப்போகும் தாலிபன்களின் நிர்வாகக் கட்டமைப்பு என்ன? : ஓர் அலசல்!

யார் இந்த தாலிபன்கள்?

முல்லா முகமது ஒமர் தனது மாணவர்களுடன் தாலிபன் அமைப்பை வலுப்படுத்தினார். பாகிஸ்தான் தனது முழு ஆதரவை அளிக்கவே, சில வருடங்களிலேயே தாலிபன் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக ஆப்கனில் உருவெடுத்தது.

20 வருடங்களாக தாலிபன்களை அவர்கள் மண்ணிலேயே அடக்கிவைத்திருந்த அமெரிக்கப் படைகள் தற்போது அங்கிருந்து வெளியேறிவிட்டதால், பதுங்கியிருந்த தாலிபன்கள் ஆப்கனைப் பாய்ந்து மிக எளிதில் கைப்பற்றியிருக்கின்றனர். தலைநகர் காபூலைக் கைப்பற்றியதன் மூலம் அதிகாரபூர்வமாக ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றனர். ‘இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான்’ என்று அந்தநாட்டின் பெயரை அதிகாரபூர்வமாக மாற்ற நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தாலிபன் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பு எப்படி இருக்கும், அதன் அரசியல் ஆளுமைகள் யார் யார் எனப் பல்வேறு கேள்விகள் பரவலாக முன்வைக்கப்பட்டுவருகின்றன.

தாலிபன் அமைப்பை முல்லா முகம்மது ஒமர் நிறுவினார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த அமைப்பின் தற்போதைய தலைவர்கள் யார் யார் என்பது நம்மில் பலருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அடுத்ததொரு போர் வெடிக்கும் வரை தாலிபன்கள் கையில்தான் ஆப்கானிஸ்தான் என்றாகிவிட்ட நிலையில், தாலிபன்களின் கூற்றுப்படி `இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தானை’ ஆளப்போகும் தாலிபன்கள் யார் யார் என்பதைப் பற்றி தற்போது விரிவாகப் பார்க்கலாம்.

ஆப்கானிஸ்தான்

தாலிபன் அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும்..!

`ஊழல் கறைபடிந்த அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து ஆப்கனை மீட்டெடுத்து, இஸ்லாமியக் கொள்கைகள், கோட்பாடுகளை முறையாகப் பின்பற்றி ஆப்கன் மக்களுக்கான தூய ஆட்சியை வழங்குவோம்!’ என்ற முழக்கத்துடன் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராகக் கிளம்பிய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்புதான் 1994-ல், `தாலிபன்’ என்ற அமைப்பாக உருவெடுத்தது.

பாஷ்டோ மொழியில் `தாலிபன்’ என்றால் மாணவர்கள் என்று பொருள். இஸ்லாம் மார்க்கத்தின் மீது அதீத பற்றுக்கொண்ட மாணவர்கள் கிளர்ச்சியாளர்களாக மாறியதால் உருவானதே இந்த அமைப்பு.

சோவியத் யூனியனுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற போர்தான் ஒருவகையில் தாலிபன் அமைப்பு உருவாகக் காரணம் என்றுகூடச் சொல்லலாம். 1978-ல் சோவியத் யூனியனின் ஆதரவுடன் இடதுசாரிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தனர். அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சோவியத் படைகள் ஒரே வருடத்தில் அந்த ஆட்சி கவிழ்ந்துவிடவே ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன. அந்த நேரத்தில், ஆப்கானை ஆக்கிரமித்த சோவியத் யூனியனை அங்கிருந்து வெளியேற்ற அமெரிக்காவின் உதவியுடன் ஒரு படையாகத் திரண்டவர்கள்தான் முஜாஹிதீன்கள்.

முஜாஹிதீன்கள்

சோவியத் யூனியனை வீழ்த்த வேண்டும் என்பதற்காக முஜாஹிதீன்களுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி செய்து அமெரிக்கா அனைத்து வகையிலும் பக்கபலமாக இருந்தது. முஜாஹிதீன்கள் அமெரிக்காவின் உதவியுடன் தங்களை எதிர்த்ததால், சோவியத் படைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சுமார் 10 ஆண்டுகள் இஸ்லாமிய போராளிக்குழுக்களிடம் போராடிய சோவியத் படை 1988-ல் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறியது.

அமெரிக்காவின் உதவியுடன் வெற்றிவாகை சூடிய இஸ்லாமியப் போராளிக் குழுக்களிடையே ஒற்றுமை இல்லாமல் போனதால், அவர்களுக்கிடையே மிகப்பெரிய மோதல் வெடித்தது. அமெரிக்க ஆதரவு முஜாஹிதீன்கள் ஒருதரப்பாகவும், அவர்களுக்கு எதிராக சில இஸ்லாமியப் போராளிகள் ஒரு தரப்பாகவும் பிரிந்தனர். அதன் விளைவாக, மீண்டும் ஆப்கானிஸ்தான் கலவர பூமியாக மாறியது.

இஸ்லாமியர்கள்தான் என்றபோதிலும் பல குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொண்டனர். அதன் காரணமாக ஆப்கனில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இப்படியாக சில வருடங்கள் கழிந்தோட, 1994-ல் பாகிஸ்தானின் ஆதரவுடன் `தாலிபன்’ என்ற அமைப்பு உருவானது. இந்த அமைப்பை நிறுவிய, முல்லா முகமது ஒமர் தனது மாணவர்களுடன் தாலிபன் அமைப்பை வலுப்படுத்தினார். பாகிஸ்தான் தனது முழு ஆதரவை அளிக்கவே சில வருடங்களிலேயே தாலிபன் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக ஆப்கனில் உருவெடுத்தது.

`தூய இஸ்லாமிய ஆட்சி’ என்ற முழக்கத்துடன் ஆப்கானின் வீதிகளில் சுற்றித் திரிந்த தாலிபன்கள், கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தி 1996-ல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை அப்போது அதிபராக இருந்த முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் புர்ஹானுதீன் ரப்பானியிடமிருந்து கைப்பற்றினார்கள். அதிகாரத்துக்கு வந்த மாத்திரத்தில், தாலிபன்கள் ஆப்கனில் கடுமையான சட்டங்களை இயற்றினார்கள். இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் மிகக் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. ஆண்கள் கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களுக்குத் தடை, பெண்கள் முகத்தை மூட வேண்டும், பெண்கள் கார் ஓட்டக் கூடாது, வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது எனப் பல்வேறு சட்டங்களை இயற்றி மக்களை வதைத்தனர்.

தாலிபன் நிறுவனர் முல்லா முகமது ஒமர்

மேலும், பாகிஸ்தான் ஆதரவுடன் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு வலுவடையவும் தாலிபன்கள் உதவி புரிந்தனர். பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடுகொண்ட தாலிபன்கள் அமெரிக்கத் தாக்குதல்களில் குற்றம்சாட்டப்பட்ட பயங்கரவாதி ஒசாமா பின் லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததுதான் அவர்களின் அமைப்பை அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவர்கள் மண்ணிலேயே தலைதூக்கவிடாமல் முடக்கிப்போட்டது. 2001-ல் ஆப்கன் மீது போர் தொடுத்த அமெரிக்கா, தனது படைகளை அனுப்பி தாலிபன்களை ஓட ஓட விரட்டியது. தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாலிபன் அமைப்பு ஆப்கனைக் கைப்பற்றியிருக்கிறது.

கனிமவளங்கள் அதிகம்கொண்ட அழகிய ஆப்கானிஸ்தான் 40 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் யூனியனால் குறிவைக்கப்பட்டதுதான் பரிதாபம். அதுவரை அமைதிப் பூங்காவாக இருந்த அந்த நாடு அமெரிக்கா, பாகிஸ்தான் என உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த 20 ஆண்டுகளாகக் கலவர பூமியாக அதகளப்பட்டுக்கொண்டிருக்கிறது.

தாலிபன் அமைப்பின் தூண்கள்:-

* முல்லா முகமது ஒமர் (1994-2015)

முல்லா முகமது ஒமர்தான் தாலிபன் அமைப்பை நிறுவியவர். இஸ்லாமிய மத குருவாக அறியப்படும் இவர், தன்னுடைய மாணவர்களை ஒன்றுதிரட்டி உருவாக்கியதுதான் தாலிபன் அமைப்பு. முல்லா முகமது ஒமர் `விசுவாசத்தின் தளபதி’ என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்படுகிறார். 2013-ல் காசநோய் காரணமாக உயிரிழந்துவிட்டார். ஆனால் இவரின் மறைவுச் செய்தி ரகசியமாக வைக்கப்பட்டு 2015-ல்தான் வெளியிடப்பட்டது.

* முல்லா அக்தர் மன்சூர் (2015-2016)

2015-ல் தாலிபன் நிறுவனர் முல்லா முகமது அதிகாரபூர்வமாக உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அதே ஆண்டு தாலிபன்களால் புதிய தலைவராக முல்லா அக்தர் மன்சூர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஒரு வருட காலம் மட்டுமே தலைவர் பதவியிலிருந்த இவர் 2016-ல் பாகிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார்.

முல்லா அக்தர் மன்சூர்

* லவி ஹிபத்துல்லா அகுந்த்ஸடா (2016- தற்போது வரை)

2016-ல் தாலிபன் தலைவர் மன்சூர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மௌலவி ஹிபத்துல்லா அகுந்த்ஸடா என்பவர் அந்த அமைப்பின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இஸ்லாமிய மதகுருவான மௌலவி ஹிபத்துல்லா அகுந்த்ஸடாதான் தற்போதைய தாலிபன் தலைவராகப் பதவி வகித்துவருகிறார். 60 வயதான இவர் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் பகுதியில் பிறந்தவர்.

முஜாஹிதீன் அமைப்பு உடைந்தபோது அதிலிருந்து, வெளியேறிய இவர் பின்னாளில் பாகிஸ்தான் ஆதரவுடன் உருவான தாலிபன் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். தாலிபன் அமைப்பின் இரண்டாவது தலைவர் மன்சூர் பாகிஸ்தானில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டபோது, தாலிபன் அமைப்பின் போர்ப்படைத் தளபதியாக இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாலிபன் அமைப்பின் சுப்ரீம் கமாண்டர் என்றழைக்கப்படும் இவர் தற்போது தாலிபன் ஆப்கனை முழுமையாகக் கைப்பற்றியிருப்பதால், அதிபர் அஷ்ரப் கனி வெளியேறிவிட்டதை அடுத்து ஆப்கானிஸ்தானின் அதிகாரபூர்வ தலைவராக நேற்று பதவியேற்றார்.

மௌலவி ஹிபத்துல்லா அகுந்த்ஸடா, தாலிபன் நிறுவனர் முல்லா முகமது தலைமையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாம் மாணவர்களுக்குப் பயிற்சியளித்து தாலிபன் அமைப்பில் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2015-ல் தாலிபன் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற இவர், தற்போது அந்த அமைப்பின் தலைவராகப் பதவி வகித்துவருகிறார். இஸ்லாமிய தாலிபனாக அறியப்படும் மௌலவி ஹிபத்துல்லா மத குரு என்பதால் ஏராளமான இஸ்லாம் மத நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். தலைநகர் காபூலைத் தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி புரியவிருக்கும் தாலிபன்கள், இவரது தலைமையில் ஆப்கானிஸ்தானின் மாகாணங்களை நிர்வகிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

மௌலவி ஹிபத்துல்லா அகுந்த்ஸடா

தாலிபனின் தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பு:-

* இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தானின் தலைவர் மௌலவி ஹிபத்துல்லா அகுந்த்ஸடா என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவருக்குக் கீழ் ஆப்கனை நிர்வகிக்க மூன்று துணைத் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

* துணைத் தலைவர்கள்

1. முல்லா அப்துல் கனி பரடர் – தாலிபன் துணை நிறுவனர்

2. முல்லா முகமது யாகூப் – தாலிபன் நிறுவனர் முல்லா முகமது ஒமரின் மகன். தாலிபனின் ராணுவத் தளபதி.

3. சிராஜுதீன் ஹக்கானி- சிராஜுதீன் ஹக்கானி. ஹக்கானி பயங்கரவாத அமைப்பின் தலைவர்.

இவர்களைத் தவிர்த்து, 26 கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் ராணுவம், உளவுத்துறை, அரசியல், பொருளாதாரம் எனப் பல்வேறு துறைகளுக்குத் தனித் தனியாக அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

(இந்த மாதிரி நிர்வாகக் கட்டமைப்பு தகவல் சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும் தரவுகளின் அடிப்படையில் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது)

  • சே. பாலாஜி
  • நன்றி: விகடன்

Leave A Reply

Your email address will not be published.