உண்மையை மூடி மறைப்பது மாபெரும் அரசியல் சூழ்ச்சி! உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு நீதி கோரி போராட்டம்.

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு நீதி கோரி நாடு முழுவதும் இன்று கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து அரசு அதன் பொறுப்புக்கூறலையும் கடமைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், இல்லையேல் சர்வதேசத்தை நாடுவோம் என்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றார்.

அத்துடன் இந்தத் தாக்குதலுக்கு நீதியை வலியுறுத்தும் விதமாக வீடுகள், வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் என்பவற்றில் இன்று கறுப்புக் கொடி ஏற்றுமாறு கத்தோலிக்க திருச்சபை கேட்டுக்கொண்டிருந்தது.

அதற்கமைய பொதுமக்கள் இன்று வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், வணக்கஸ்தலங்களிலும் கறுப்புக் கொடிகளை ஏற்றினர்.

இதேவேளை, “உண்மையை மூடி மறைப்பது மாபெரும் அரசியல் சூழ்ச்சி; உண்மையைக் கண்டறிய ஒன்றிணைவோம்” என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வாசற்பகுதியில் இன்று வைக்கப்பட்டிருந்தது. தேவாலயத்தில் இன்று விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இன்று நடைபெற்ற இந்தக் கறுப்புக் கொடி போராட்டம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாக நாட்டு மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது என்று கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.