தமிழக அரசு அங்கன்வாடி ஊழியர்களுக்கு போட்ட கடுமையான உத்தரவு

அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஒன்பது முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வரும் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடைபெறும்.

அதேசமயம், பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் நேரடி முறையில் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வழக்கம்போல் ஆன்லைன் வழியிலும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் மாணவர்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமான 8 பாட வேளைகளுக்கு பதில் காலையில் 3 பாட வேளையும் பிற்பகலில் இரண்டு பாடவேளையும் என நாளொன்றுக்கு 5 பாடவேளைகளாக வகுப்புகள் நடைபெறும்.

ஒவ்வொரு பாடவேளையும், வழக்கமான 45 நிமிடத்திற்குப் பதிலாக, தலா ஒரு மணி நேரம் நடைபெறும். நகர்ப்புறங்களில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பின், அதற்கேற்ப வகுப்புகளை பிரித்து பாடம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், சேலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஆசிரியர்களுக்காக சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாம்களில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை ஆசிரியர்கள் ஆர்வமுடன் செலுத்திக் கொண்டனர்.

இதேபோன்று அங்கன்வாடி மையங்கள் வரும் ஒன்றாம் தேதி முதல் திறக்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அங்கன்வாடி மையத்துக்கு வருகைதரும் 2 முதல் 6-வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை. அங்கன்வாடி மையங்களில் சூடான சத்துணவு வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் நகப்பூச்சு பூசவோ, செயற்கை நகங்களை பயன்படுத்தவோ கூடாது என்றும் ஊழியர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும் என்றும் சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ம் தேதிக்குள் நாடு முழுவதும் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மாதத்தில் 2 கோடி தடுப்பூசிகள் கூடுதலாக ஒதுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.