ஆப்கானில் தற்போது நிலவுவது தற்காலிக அமைதி ? : சுவிசிலிருந்து சண் தவராஜா

இன்று உலக அரங்கில் மிகப் பெரிய பேசுபொருளாக இரண்டு விடயங்கள் இருந்து வருகின்றன.

ஒன்று கொரோனாக் கொள்ளை நோய் பற்றியது.

இரண்டாவது பேசு பொருள் ஆப்கானிஸ்தான்.

Taliban fighters take control of Afghan presidential palace after the Afghan President Ashraf Ghani fled the country, in Kabul, Afghanistan, Sunday, Aug. 15, 2021. (AP Photo/Zabi Karimi)

யாருமே எதிர்பார்க்காத வகையில் – ஒரு வகையில் பார்த்தால், தலீபான்களே எதிர்பார்க்காத வகையில் – 12 நாட்களுக்குள் நாடு தலீபான்களின் பிடியில் வந்துவிட்டது.

தலீபான்களே இதனை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதனை அவர்களின் பிந்திய செயற்பாடுகள்; மூலம் தெளிவாக அவதானிக்க முடிகின்றது.

நாட்டில் மோதல்கள் ஓய்ந்து விட்டாலும், சட்டம், ஒழுங்கு என்பவை இன்னமும் கட்டுக்குள் வரவில்லை.

தலைநகர் காபுல் உள்ளிட்ட இடங்களில் அமைதி நிலவினாலும், நிச்சயமற்ற ஒரு நிலை இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு தொகுதி மக்கள் நாட்டைவிட்டு வெளியேறும் நோக்குடன் காபுல் விமான நிலையத்தை நோக்கிப் படையெடுப்பதைப் பார்க்க முடிகின்றது.

ஏற்கனவே விமான நிலையத்தில் குழுமி இருக்கும் மக்கள் விமானத்தில் தொங்கிக் கொண்டாவது பறந்து செல்ல முயற்சித்த காட்சிகளை நாம் அனைவருமே பார்த்திருப்போம்.

மறுபுறம், பாகிஸ்தான் எல்லையூடாக ஆப்கானிய அகதிகள் சிலர் நாடு திரும்புவதையும் காண முடிகிறது.

தலீபான்களுக்கு எதிரான படை நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தமது நாட்டுப் பிரசைகளையும், படையினரையும் வெளியேற்றப் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றனர்.

காபுல் விமான நிலையத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள அமெரிக்கப் படையினர் முன்னுரிமை அடிப்படையில் இராஜதந்திரிகளை மட்டுமன்றி படை நடவடிக்கைகளில் ஒத்துழைத்த நாய்களையும் விமானங்களில் ஏற்றி அனுப்பி வைத்தமை கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.

தமது தூதுவராலயங்களை மூடிய மேற்குலக நாடுகள் தமது அலுவலர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகையில், ரஸ்யா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்தும் தமது தூதுவராலயங்களை இயங்கச் செய்த வண்ணம் உள்ளமை ஆப்கானிஸ்தானின் எதிர்கால அரசியலைக் கோடி காட்டுவதாக உள்ளது.

தலீபான்களின் அதிரடி முன்னேற்றம் எப்படிச் சாத்தியமானது என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.

20 வருடங்களுக்கும் மேலாக, பல கோடி டொலர்களைக் கொட்டி, பயிற்றுவித்த 3 இலட்சத்துக்கும் அதிகமான நவீனரக ஆயுதங்களையும், போர்த் தளபாடங்களையும் கொண்டிருந்த ஆப்கான் படையினரால், முறையாகப் பயிற்சி பெறாத, குறைந்தளவே ஆயுதங்களையும், கைப்பற்றப்பட்ட போர்த் தளபாடங்களையும் கொண்டிருந்த 60,000 முதல் 80,000 வரையான தலீபான்களால் எப்படி குறுகிய காலத்தில் நிலைகுலையச் செய்ய முடிந்தது.

பல இடங்களில் எதிர்ப்பே தெரிவிக்காமல் ஆப்கான் படையினர் சரணடைந்ததற்கான காரணம் என்ன?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தலைநகர் காபுலில் பாரிய எதிர்ப்புகள் எதுவுமின்றி தலீபான்கள் முன்னேறியது எவ்வாறு?

இறுதிநாள் வரை தலீபான்களை எதிர்த்துப் போராடப் போவதாகச் சூழுரை செய்த, இணைந்து போராடுவதற்காக வெவ்வேறு யுத்தப் பிரபுக்களுடன் பேச்சுக்களை நடாத்திய கமீட் கர்சாய் திடீரெனத் தப்பியோடிய காரணம் என்ன?

ஆயுதப் போராட்டத்தின் வெற்றி என்பது நவீன ஆயுதங்களாலும், சிறப்புப் பயிற்சி பெற்ற போர் வீரர்களாலும் மாத்திரமே தீர்மானிக்கப்படுவதில்லை.

போராடுவோரின் மனவுறுதி மிகவும் முக்கியம் என்பது ஆப்கானில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி மக்கள் ஆதரவும் இன்றியமையாததது. எந்தவொரு போராட்ட இயக்கமும் மக்கள் ஆதரவு இன்றி நிலைத்திருக்க முடியாது.

5 வருட ஆட்சி, 20 வருட தலைமறைவு வாழ்க்கை என்பவை மக்கள் ஆதரவு இன்றிச் சாத்தியமாயிருக்க வாய்ப்பில்லை. இவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளாததே மேற்குலகின் இன்றைய தோல்விக்குப் பிரதான காரணங்கள்.

ஆப்கானிஸ்தான் மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகப் பிற்போக்குவாதிகள், மத அடிப்படைவாதத்தில் ஊறியவர்கள் என வகைப்படுத்திவிட முடியாது.

1970களில் ஆப்கானிஸ்தான் ஒரு இடதுசாரி நாடாகவே இருந்தது.

இன்று மேற்குலகு முன்மொழியும் மனித உரிமைகள், பெண் உரிமை என்பவை பேணப்பட்ட நிலையில் வாழ்ந்த மக்களை இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை நோக்கி இழுத்துச் சென்ற பெருமை(?) அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்கே உரியது.

நஜிபுல்லா தலைமையிலான அன்றைய ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கியிருந்த சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக ‘முஜாகிதீன்’ தீவிரவாதிகளை உருவாக்கிச் சாதனை படைத்திருந்தது அமெரிக்கா.

சோவியத் சார்பு அரசாங்கத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்ட அவர்கள் பாவித்த கருவிகளுள் ஒன்றாக இஸ்லாமிய அடிப்படைவாதம் இருந்தது.

முஜாகிதீன்களின் போராட்டம் காரணமாகவும், உலக நாடுகளின் அழுத்தம் காரணமாகவும் சோவியத் படைகள் ஆப்கானை விட்டு வெளியேறிய பின்னரும் கூட சுமார் 3 வருடங்கள் அன்றைய அரசாங்கத்தால் தாக்குப்பிடிக்க முடிந்திருந்தது.

காரணம் அன்றைய ஆப்கான் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து வெறுமனே படைத்துறைப் பயிற்சியையும் ஆயுதங்களையும் மட்டும் வழங்கியிருக்கவில்லை. மாறாக, தாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என்ற தெளிவு அவர்களிடம் இருந்தது. தங்கள் உயிரைக் கொடுத்தாவது தங்கள் கொள்கைகளைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனைத் தெளிவை அவர்கள் பெற்றிருந்தார்கள்.

தற்போதைய நிலையில் ஆப்கான் தேசிய இராணுவத்திடம் அத்தகைய கொள்கைப் பிடிப்போ, சண்டை செய்வதற்கான தெளிவான நோக்கமோ இருந்ததாக அறிய முடியவில்லை.

மறுபுறம், ஆப்கான் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகவே தாங்கள் முயற்சி செய்வதாக அமெரிக்கத் தரப்பு தொடர்ச்சியாகக் கூறிவந்த போதிலும், அவர்கள் ஆப்கான் மக்களின் உள்ளக் கிடக்கைகள் தொடர்பில் உண்மையிலேயே ஆய்வுகளின் அடிப்படையில் அறிந்திருந்தார்களா என்ற கேள்வி எழுகின்றது.

ஆப்கான் நீண்ட காலமாக ஒரு நாடாக இருந்துவந்த போதிலும் அங்குள்ள மக்கள் ஒரு தேசமாக இருக்கவில்லை என்பதே யதார்த்தம். அவர்கள் எப்போதும், தங்களுக்குள் பேதங்கள் கொண்ட இனக் குழுக்களாகவே தங்களைக் கருதிச் செயற்பட்டு வந்திருக்கின்றார்கள். தொடர்ந்தும் குறிப்பிட்ட காலத்துக்கு அவ்வாறே இருப்பார்கள் என்பதையும் கள நிலவரம் உணர்த்துகின்றது.

மக்களே வரலாறைப் படைக்கிறார்கள். எனவே, எந்தவொரு அரசியல் முன்னெடுப்பும் மக்கள் நலன் சார்ந்ததாக, அவர்களின் பார்வையில் இருந்து பார்க்கப்படுவதாக இருக்க வேண்டும்.

கீழைத்தேய மரபுகளை, மாண்புகளைக் கொண்ட ஆப்கான மக்களை மேலைத்தேயக் கலாசாரங்களை நோக்கிச் சடுதியாக மாற்றுவது என்பது சாத்தியமற்றது என்பதை மேற்குலகம் புரிந்து கொண்டிருக்கவில்லை என்பதையே தலீபான்களின் வெற்றி உணர்த்துகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு விடயத்தைக் கூற முடியும். ஆப்கான் மக்களிடம் பஞ்சாயத்து வகை நீதி முறைமை காலங்காலமாக இருந்து வருகின்றது.

ஊர்த் தலைவர்கள், அறிஞர்கள் முன்னிலையில் கூடி, விவாதித்து வழக்குகள் தீர்ப்பு காணப்படும் எளிய முறைமை அங்கிருந்தது. விரைவாகத் தீர்ப்புக் கிடைக்கும் அத்தகைய முறைமையை தாமதமாகும் மேற்குலக நீதி முறைமைக்கு மாற்றீடு செய்ய மேற்குலகு மேற்கொண்ட முயற்சி ஆப்கான் மக்களைப் பொறுத்தவரை அந்நியமாகத் தெரிந்தது.

அதனால் அது வரவேற்பைப் பெறாமல் போனது மாத்திரமன்றி, மக்களின் வெறுப்பையும் சம்பாதித்தது. அதேவேளை, தலீபான்கள் தொடர்ந்தும் நடைமுறையில் வைத்திருந்த பஞ்சாயத்துக்களை மக்கள் அதிகம் நாடும் நிலை இருந்தது.

இது போன்று பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

தற்போது ஆப்கான் நாட்டின் பெயர் மீண்டும் ‘ஆப்கான் இஸ்லாமிய அமீரகம்’ என மாற்றப்பட்டுள்ளது. 102 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய காலனித்துவவாதிகளிடம் இருந்து சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 19 ஆம் நாளில் இந்தப் பிரகடனத்தைத் தலீபான்கள் வெளியிட்டு உள்ளார்கள். இந்த இஸ்லாமிய அமீரகத்தில் பொது மக்களின் வாழ்வு எவ்வாறு அமையும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தலீபான்கள் தமது கொள்கைகளில் இருந்து மாறவே மாட்டார்கள் என ஒரு சாராரும், இல்லை அவர்கள் முன்னரைப் போல் இல்லை. பெரிதும் மாறியிருக்கிறார்கள் என மற்றொரு சாராரும் பொதுத் தளங்களில் கருத்துகளை முன்வைத்து வருவதைக் காண முடிகின்றது.

உலகக் காவல்காரனாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தோல்வியடையச் செய்ததால் தலீபான்களை வரவேற்க வேண்டும் என ஒரு சாராரும், அடிப்படையில் தலீபான்கள் மதவாதிகள். மதவாதம் எப்போதுமே மனித குலத்துக்கு எதிரானது. எனவே, தலீபான்களின் மீளவருகையை வரவேற்க முடியாது என மற்றொரு சாராரும் வாதிட்டு வருகின்றனர்.

தலீபான்களின் ஆட்சி தங்களுக்கு ஏற்புடைத்ததாக உள்ளதா, இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் ஆப்கானிய மக்களே. வெளியில் இருந்து கொண்டு யாரும் அந்த மக்களின் விருப்பு வெறுப்பை முடிவு செய்துவிட முடியாது.

ஆனால், ஏகாதிபத்தியவாதிகள் தமது முயற்சிகளை எப்போதும் கைவிட்டுவிடப் போவதில்லை. ஏற்கனவே, அமெரிக்க சார்பு ஆயுதக் குழுக்கள் ஆப்கானிஸ்தானில் செயற்பட்ட வண்ணமேயே உள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே என்ற பெயரிலான தலீபான் எதிரப்புக் குழுவொன்று கடந்தகாலத்தில் அமெரிக்க விமானப் படையின் ஆதரவுடன் தலீபான்களுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தது.

புர்ஹனுத்தீன் ரப்பானி தலைமையிலான அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவரும், முஜாகிதீன் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அஹ்மட் ஷா மசூட் அவர்களின் மகனும், ஆப்கான் தேசிய எதிர்ப்புப் படையின் தலைவருமான அஹ்மட் மசூட், தலிபான்களை எதிர்த்துப் போராட மேற்குலகிடம் ஆதரவு கோரி நிற்கிறார்.

இவை தவிர வேறுபல தலீபான் எதிர்ப்புக் குழுக்களும் ஆப்கானிஸ்தானில் செயற்பட்டு வருகின்றன.

தலீபான்களின் ஆட்சியில் ரஸ்யாவினதும், சீனாவினதும் செல்வாக்கு அதிகமாக இருக்கலாம் எனக் கருத்துகள் வெளியாகிவரும் நிலையில், தலீபான்களுக்கு எதிரான குழுக்களுக்கு மேற்குலகு ஆதரவு அளிக்க முன்வரும் என்பதும் இயல்பாக எதிர்பார்க்கப்படக் கூடிய ஒன்றே.

இது தவிர, ஒரு டிரில்லியன் டொலர் பெறுமதியான இரும்பு, செம்பு, தங்கம் மற்றும் லித்தியம் ஆகிய கனிம வளங்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக சி.என்.என். அண்மையில் வெளியட்ட செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கணிம வளங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவை சீனா, ரஸ்யா போன்ற நாடுகளுக்குக் கிடைப்பதைத் தடுக்கவும் மேற்குலகு முயலும் என நிச்சயமாக நம்பலாம்.

இத்தகைய பின்னணியில், ஆப்கானில் தற்போது நிலவுவது தற்காலிக அமைதியே அன்றி வேறில்லை எனலாம்.

பிந்திய குறிப்பு : கட்டுரையாளர் சண் எழுதிய கட்டுரைக்கு பின் உள்ள நிலை ….

 

–  காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற இரு தாக்குதலில் குறைந்தபட்சம் 60 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தாலிபன் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், பலியானவர்களின் விவரத்தை இன்னும் அலுவல்பூர்வமாக எந்த தரப்பும் உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.