மலரும் நினைவுகள்… இக்கணத்தில் வாழ்வோம்!

இல்வாழ்வில் அடியெடுத்து வைத்தபின் குடும்பம் என ஒன்று உருவாகி குழந்தைகள் பிறந்து அவர்கள் வேகமாக வளர்ந்தும் விட்டார்கள்.

பள்ளி, கல்லூரி என அவர்களுக்குப் பிடித்த கல்வியைக் கற்று அவர்களது எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் நிலைக்கும் வந்து விட்டார்கள்.

நாம் எல்லோரும் மெல்ல, மெல்ல மேலும் முதுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

நம் வயதுக்கேற்ற சின்னச் சின்ன உடல் உபாதைகள் நமக்கு இருந்தபோதும் ஆரோக்கியத்தை காத்துக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.

வாழ்வினை திரும்பிப் பார்க்கும் போது, மலைப்பாக இருக்கிறது.

எத்தனையோ சந்தோஷங்களும்.. சிரிப்புகளும்.. எத்தனையோ துக்கங்களும்… கண்ணீரும்… எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டோம்.

நம் மீது அன்பைப் பொழிந்த அல்லது நாம் அன்பு செலுத்திய பலர் இன்று நம்மிடையே இல்லை.

இயற்கைச் சீற்றங்கள்
பேரழிவுகள், விபத்துக்கள்,
கொடிய மற்றும் கொள்ளைநோய்கள், பஞ்சங்கள்,
போர்கள், தீவிரவாதம்
ஆகியவற்றிலிருந்து இதுவரை
தப்பித்துக் கொண்டோம்.

நாம் ஆசையாய் நினைத்த விஷயங்கள் சில கைகூடாததாலும்,

நாம் கொஞ்சமும் நினைத்தே பார்த்திராத சில விஷயங்கள் நடந்தேறியதாலும்,

மனம், வாக்கு, செயல் மூன்றிலும் மாற்றம் கண்டோம்…

பெரியவர்களின் நிறைய ஆசீர்வாதங்கள், சில சமயங்களில் காயப்படுத்திய சொற்கள் இரண்டையும் சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டோம்.

யாரெல்லாம் நம்மை உண்மையாய் நேசிப்பவர்கள்?யாரெல்லாம்,

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள், யாரெல்லாம் பாசமாய் இருப்பது போல நடிப்பவர்கள் என்பதையெல்லாம் கண்டு கொண்டோம்.

சில நண்பர்கள்
சில உறவுகள்
பிரிந்து போனதையும்,
சில நண்பர்கள்
சில உறவுகள்
நம்மை மறந்து போனதையும் இயல்பாய் எடுத்துக் கொண்டோம்.

புதுப்புது இடங்களைச் சுற்றிப் பார்த்தும், வித விதமான உணவுகளை ருசித்துப் பார்த்தும் மகிழ்ந்த தருணங்களை நினைவில் பதிய வைத்துக் கொண்டோம்.

வாழ்வின் இக்கட்டான நேரங்களில், ஆத்மார்த்தமான நண்பன் அல்லது தோழியிடமிருந்து
ஆலோசனையைப் பெற்று அதிலிருந்தும் மீண்டு வந்தோம்.

வேறு வேறு இடங்களில் வேறு வேறு மனிதர்களுடன், வேறு வேறு பதவிகளில் பணி புரிந்து நிறைய அனுபவங்களை சேகரித்துக் கொண்டோம்…

பிறந்தநாள்,
திருமண நாள்,
சுப நிகழ்வுகள், விழாக்கள், புதுவருடம் போன்ற விசேஷ தினங்கள், கோவில் திருவிழா,
தீபாவளி மற்றும் தைப்பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூடி மகிழ்ந்தோம். பணம் மட்டுமே வாழ்க்கையில்லை எனப் புரிந்து கொண்டோம்.

பணம், பட்டம், பதவி, புகழ் , வீடு, தோட்டம் ,
நகை , கார், சொத்து, சுகம், உறவுகள்
எதுவும் நம்முடன் கடைசிவரை வரப் போவதில்லை என அறிந்து கொண்டோம்..

நிம்மதியை வெளியில் தேடிப் பயனில்லை. அது நமக்குள்ளே தான் இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம்.

எல்லாவற்றையும் மன்னித்துவிடவும்
சிலவற்றையாவது மறந்துவிடவும்
கற்றுக் கொண்டோம்.

எல்லாமும் கடந்து போகும் எனவும்,

எதுவும் நிரந்தரமில்லை எனவும் புரிந்து கொண்டோம்..

காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும்.

புத்தகங்களை வாசிப்பதும்,

இயற்கையை ரசிப்பதும்,

இனிய இசை கேட்பதும்,

இறைவனிடம் பிரார்த்திப்பதும்

மனதுக்கு ஆறுதலான விஷயங்கள்.

எனவே

இக்கணத்தில் வாழ்வோம்!

வாழ்க்கையே ஒரு திருவிழாதான். 

நாளும் அதைக் கொண்டாடுவோம்…🌹

–  ஆக்கம் : RK  

– படங்கள் :TSounthar

Leave A Reply

Your email address will not be published.