காகிதப்பூக்கள்- சிறுகதை -கோதை

ஸ்வேதா தன் இரண்டு வயதாகப் போகும் குழந்தை இழுத்த இழுப்புக்கு மறுப்பேதுமின்றி முன்னே இருந்த வரபேற்பறைக்கு நகர்ந்தாள். அங்கு  மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தன் விளையாட்டுப் பொருட்களைக் குழந்தை ஆழமாக ஊடுருவிப் பார்த்தது. அவற்றைப் பரபரவென  விதம் விதமாக மாற்றியடுக்கி தன்னுடைய குழந்தை உலகை இன்னும் அழகாக்கி மகிழ்வடைந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு . பரசவத்தில் கைகளைக் கொட்டிச் சிரித்தது.

ஸ்வேதா தன் மழலையின் உலகோடு தன்னை சேர்த்துக் கொள்ள முயன்று, தோற்றுப் போனவளாய் குழந்தைக்குப்  பக்கத்தில் இருந்த கதிரையில் தன்னைச் சாய்த்துக் கொண்டாள்.

 

அன்று மதியம் தன் கணவனோடு  நடந்த சம்பாசனையோடு அவள் மனசு தானாக ஒட்டிக்கொண்டது.

“என்ர கார் திறப்பைக் கண்டனீங்களோ?” அவளைப் பார்த்துக் கதைக்க நேரமில்லாமல் அவன் தன் கண்களால் திறப்புக் கோர்வையைத் தேடியபடியே கேள்வியைத் தொடுத்தான்.

“இருங்கோ தேடிப் பார்க்கிறன்!” அவள் தன் கணவன் தன்னைப் பார்த்துப் பேசக்கூடும் என்ற நம்பிக்கையில் அவனைப் பார்க்க அவன் தனது பரபரப்புக்குள் அமிழ்ந்து போயிருந்தான்.

 

அவள் தன் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டே அவன் வழமையாகத் திறப்பைத் தொலைக்கும் இடங்களைத் தேடிப்பிடித்து, அவன் திறப்புக் கோர்வையைக் கண்டு பிடித்தாள்.

 

“இந்தாங்கோ திறப்பு, நீங்கள் இருந்த கதிரையில தான் பின்னுக்கு விழுந்து போய் கிடந்தது.”

“அப்ப கடையில இருந்து எத்தனை மணிக்குத் திரும்புவீங்கள்?” தொடர்ந்தும் அவள் அவன் மேலிருந்த தன் பாசத்தை வார்த்தைகளில்க் கொட்டினாள்.

 

அவள் கைகளிலிருந்து திறப்புக் கோர்வையை வாங்கியபடியே அவளுக்குப் பதில் எதுவும் சொல்லாமல் தொலைபேசி அழைப்பொன்றில் அவன் தொலைந்து போயிருந்தான்.

“கடையை இப்ப அரை மணித்தியாலத்தில திறந்திடுவன், எனக்கு உடனடியாய் பால், பாண் எல்லாம் தேவை! பிறகு நேற்றைக்கு மாதிரி பிந்தி வந்திட்டு தலையைச் சொறிஞ்சு கொண்டு நிக்கிறேல்லை!”

யாருக்கோ ஆணைகள் பிறப்பித்தபடி, “கதவை உள்பக்கமாய் தாழ்ப்பாள் போட்டுக் கொள், போட்டு வாறன்!”  என்ற தினமும் சொல்லும் வாக்கியத்தை இயந்திரகதியில் சொல்லியபடியே அவள் அன்புக்குரிய கணவன் வீட்டிலிருந்து தன் விலை உயர்ந்த காரில் பாய்ந்து ஏறிக்கொண்டான்.

 

அவள் தன் குழந்தையின்  உலகில் புதைந்து, தன் ஏமாற்றத்தை மறைக்க முயன்று, தோற்றுப் போய், வெறுமனே தன் குழந்தையைப் பார்த்து ரசிக்கத் தொடங்கினாள். அந்தக் கொடுமையான  தனிமையை அவள் வெறுத்தாள்.

வெளி உலகோடு தொடர்புகள் அறுந்து போன பொழுதுகள் அவளை வாட்டி வதைக்கத் தொடங்கியிருந்தன. அவளுக்கு அவள் காதலில் விழுந்து தவித்த நாட்கள் இதயத்தை அறுக்கத் தொடங்கியது. மெல்ல அரும்பிய காதல்! பாசமாய் மாறி, உறவுகளில் ஊறித் திளைத்திருந்த நாட்கள் நினைவில் மிதந்தன.

அவனோடு சிரித்துப் பேசி மகிழ்ந்திருந்த தருணங்களை எப்படி, எப்போது இழந்தாள்?   எதற்காக இழந்தாள் ? அவளால் மேற்கொண்டு சிந்திக்க முடியவில்லை.

நினைவுகளின் வசீகரத்தில் இதயத்தில்  சில்லென்ற தூவானம் தட்ட, தனது காதலனை  பார்க்கத் துடித்த அவள் கண்களை வலிகள் தழுவிக்கொண்டன.

88888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

அவள் குழந்தை எதை எடுத்து எப்படிஆரம்பிப்பது என்று தீவிரமாக ஒரு நிமிடம்  யோசித்தது. அதனுடைய சுருண்ட குழல்முடிகள் முகத்தில் வீழ்ந்ததை அதன் பிஞ்சுக் கைகள் பின்னே தள்ளி விட்டன. தனக்குப் பிடித்த புகையிரதப் பெட்டியை எடுத்துப் பொருத்தி அதனுள் இருந்த தனிப்  பெட்டிகளை வெளியே எடுக்க முன்பு தன் அம்மாவை அன்போடு பார்த்து கைகளை   நீட்டியது.

ஸ்வேதாவின் கைகள் நடுங்கத் தொடங்கின. தன்  தலையை அவள் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். தேகம் முழுவதும் வியர்த்துக் கொட்டத் தொடங்க அவள் மேசையை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். கண்கள் இருண்டன. எங்கோ ஒரு இருண்ட பாதாளத்தின் அறையொன்று திறந்து அவளை உள்வாங்கத் தயாராக இருந்த வேளை திடீரெனக்  கேட்ட மழழையில் எல்லாமே மறைந்து போய் அவள் சுய நினைவு திரும்பினாள்.

 

 

“ரா ரா டிரைன்!” குழந்தையின் குழி விழுந்த கன்னச்சிரிப்பு சலங்கை மணிகளாகச் சிதறி விழுந்தது அபிராமி என்ற பெயரில் இருந்த ரா சத்தத்துக்கு அம்மாவும் அப்பாவும்  கொடுத்த அழுத்தத்துக்கு குழந்தை தன் காதில் விழுந்த  ஒலிகளுக்கேற்ப தன் பெயரை ராரா என்று மாற்றி அமைத்துக் கொண்டது.

 

“அப்பா? அப்பா? “ ரா ரா தேடியபடி அம்மாவை நிமிர்ந்து பார்த்தது.

அம்மாவின் சிரித்த முகத்தில் திடீரென்று படிந்த சோகத்துக்கான காரணத்தை உணரக்கூடிய வயதில்லாவிட்டாலும் ரா ரா அம்மாவின் கன்னத்தில்  அழுத்தி முத்தமிட்டது. அவள் நிமிர்ந்து தன் திருமண நாளில் எடுத்த  புகைப்படத்தை வாஞ்சையோடு உற்றுநோக்கினாள்.  அவள் கணவன், அவளுக்குப் பக்கத்தில் புன்னைகையுடன் நின்றிருந்தான் .

 

அவள் பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றத் தொடங்கினாள். குண்டு மல்லிகைநேற்றுத்தான் மூன்றே மூன்று பூக்களை பிரசவித்திருந்தது. இரண்டு பூக்கள் ஒன்றை ஒன்று தழுவியபடி ஒரு கிளையிலும் இன்னொரு மல்லிகை தனியாக மற்றைய கிளையிலும் பிறந்திருந்தன. வரவேற்பறை   எங்கும் மல்லிகையின் வாசனை பரவியிருந்தது. இதமான வாசனை நாசித்துவாரமெங்கும் தொட்டு இதயத்தை ஊடுருவிப் பார்த்தது.  குழந்தை மீண்டும் தாயை நிமிர்ந்து பார்த்து கை கொட்டி சிரித்து, தான் பொருத்திய ரயில் தண்டவாளங்களை காட்டமுயற்சித்தது. அவள்  கண்களில் குண்டு மல்லிகைகள் மட்டும் மணம் வீசின. தன்னந்தனியே பூத்திருந்த ஒற்றை மல்லிகை அவள் கண்களில் நிலைத்து நின்றது!

“அம்மா! “ராரா மழலை பேசியது! ஸ்வேதாவின் கண்களில் மல்லிகைகளின் தழுவல்.

ராரா எழும்பி தாயை நோக்கி  அடி எடுத்த போது அதன் ஒன்றரை  வயதுப்பாதங்கள்  லேசாகத் தள்ளாடின. அந்தத் தள்ளாடலில் திடுக்குற்றதில், அவள்  இயல்புக்கு மாறினாள். அவள் கைகளில் இன்னும் நடுக்கம்.

குழந்தையைத் தாங்கிப் பிடித்தாள். குழந்தை வசீகரமாய் புன்னகைத்தது.. அவளையும் அப்புன்னகை வசீகரித்துக் கொண்டது.

 

ராராவின்  தண்டவாளங்கள் மிகத் திறமையுடன் பொருத்தப்பட்டு,  வளைந்து நெளிந்துஓடிக் கொண்டிருந்தது. அதிலும் ஓடிக்  கொண்டிருந்த மூன்று ரயில் பெட்டிகள் அந்த தண்டவாளங்களையும்  நிஜமாக்கின. மிகத் தத்ரூபமாக இணைக்கப்பட்ட தண்டவாளங்களையும் புகையிரதப் பெட்டிகளையும் தன் தாய் தொட்டுப்  பார்ப்பதை ராராவேடிக்கை  பார்த்தது. ராரா  பெட்டிகளை முன்னுக்குத் தள்ளி ஓடப் பண்ணியது. திடீரென ஒரு புகையிரதப் பெட்டி தனியாக நிற்க மற்றைய இரண்டும் சேர்ந்து ஒடத் தொடங்கின. தனியே நின்ற புகையிரதப் பெட்டியை மீண்டும் அவள் கண்கள் வேதனையோடு தள்ளி முன்னேகொண்டு வர முயற்சித்துத் தோற்றுப் போனது.

“அம்மா!” மீண்டும் மழலை பேசியது ராரா.

 

அவள் கண்களில் மீண்டும் இரண்டு ரெயில்பெட்டிகள். ஒற்றையாய் நின்ற ஒரு புகையிரதப் பெட்டி! ராராவின் கை வண்ணத்தில்  தண்டவாளங்கள் நிலத்தில் இணைக்கப்பட்டு வரவேற்பறையை சுற்றி வந்து மீண்டும் இணைந்திருந்தன. தனியே நின்ற புகையிரதப் பெட்டியை திரும்பிப் பார்த்த ராரா ஒரு வினாடி  காத்திருந்து, பின் சுதாகரித்து சேர்ந்திருந்த இரண்டு ரெயில்  பெட்டிகளையும் ஒரு திறமை வாய்ந்த ஓட்டுனராய்த் தண்டவாளத்தில் செலுத்தத்தொடங்க அவள் திரும்பவும் கண்களால் அந்த ஒற்றை புகையிரதப் பெட்டியை முன்னே தள்ளிவிட முயன்று தோற்றுப் போனாள்.

சிறிது நேரத்தில் ராரா ரெண்டு பெட்டிகளையும் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே கொண்டு வந்து ஒற்றையாய் நின்ற ரெயில் பெட்டியின்  பின்னே நிறுத்தியது.

 

தனியாக நின்ற  புகையிரதப் பெட்டியை முன்னும் பின்னும் தள்ளி  மற்றைய

ரெண்டு பெட்டிகளுடன் அவள் சேர்க்கப் பிரயத்தனப்பட்ட அந்தக் கணம் அவளுக்கு யுகங்களாய்த்தெரிந்தது.

 

அவள் தன் குழந்தையுடன்  தனித்துப் போனது எப்போது? காதலில் மயங்கிக் கிடந்த அவளும் அவள் காதலனும் அந்தக் காதலும் கூட மங்கிப் போன காட்சிகளாய் மனதில் ஒரு மூலையில் கிடந்ததை அவள் அறிந்த போது அவளுக்கு அயர்ச்சி மேலிட்டது.  அவனை நினைத்து ஏங்கிய மனத்தைத் தேற்ற வழியின்றி ஸ்வேதா துவண்டு போனாள்.

 

கைத் தொலைபேசி அலறியது. அவள் நடுங்கிய கைகள் பதறித்துடிக்கத் கைத்தொலைபேசியை எடுக்க முயற்சித்ததில் அதில் தெரிந்த புகைப்படத்தையும், பின் தானே இணைப்பை அழுத்தி அதில் கேட்டகுரலையும் கிரகித்து, குழந்தை பாசமாய் மழலை பேசியது. ஸ்வேதா எழுந்து போய் தன் குழந்தையிடமிருந்து  தொலைபேசியை வாங்கிக் கொண்டாள்.

 

“ஹலோ ஸ்வேதா!” அதே காந்தக்குரல். தொலைந்து போன அவள் காதலன்!

 

“ஹலோ, காந்தன்!” ஸ்வேதாவின் குரலில் அவள் மனதில் புதையுண்டிருந்த அத்தனை காதலும் வயப்பட்டிருந்தன.  அவள் தன்னை மறந்தாள்.

 

“நேற்றைக்கு நான் பாங்கில போட்ட ரெண்டு செக்கும் (cheque) துள்ளீட்டுதாம். இப்பிடியே போனால் என்ன செய்யிறதெண்டு ஒண்டுமாய் விளங்கேல்ல. நான் பின்னேரம் பாங்க் மனேஜரை சந்திக்கிறதுக்கு  ஏற்பாடு செய்திருக்கிறன். என்னைப் பார்த்துக் கொண்டிருக்காமல் சாப்பிடு, ஆறுதலாய்க் கதைக்கிறன்.”  காந்தன் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டு அவளுக்காகக் காத்திராமல் தொடர்பைத் துண்டித்தான்.

 

 

ஒற்றை மல்லிகையும் தன்னந் தனியே நின்ற புகையிரதப் பெட்டியும்  அவள் கண்களில் மீண்டும் நிழலாடின. அவள் திடீரென மின்சாரத்தில் தாக்குண்டவள் போல தன் திருமண புகைப் படத்தையும் தன் கைத் தொலைபேசியில் தெரிந்த படத்தையும் மீண்டும் ஒரு முறை பார்த்ததில் அவளுக்கு அவர்கள் இருவரையும் இப்போது நன்றாகப் புரிந்தது. இருவரும் ஒன்றேயாகினும்,  தொலைந்து போன தன் காதலனைக் காணாமல் ஸ்வேதா மீண்டும் தடுமாறத் தொடங்கினாள்.

நிஜங்களின்   வலியில் அவள் துவண்ட நிமிடங்கள் யுகங்களாய் மாறத்தொடங்கின.

Leave A Reply

Your email address will not be published.