யாழில் இன்று எண்மரை காவுகொண்டது கொரோனா! கைதடி அரச இல்ல முதியவர் ஒருவரும் மரணம்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் கைதடி அரச முதியோர் இல்லத்தில் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட முதியவர் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொக்குவிலைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும், இருபாலையைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும், கொக்குவிலைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 32 வயதுடைய கிளிநொச்சிப் பெண் ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளார். அவர் கொரோனாத் தொற்றுடன் குழந்தை பிரசவித்து 10 நாள்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கைதடி அரச முதியோர் இல்லத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 41 முதியவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

மந்திகை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் இன்று வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.

உடுவிலில் 74 வயதுடைய ஆண் ஒருவர் இன்று வீட்டில் உயிரிழந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவரது சடலம் தெல்லிப்பழை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மின் தகனம் செய்யப்படும் என்று உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259ஆக உயர்வடைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.