நாங்கள் ஏன் இந்திய குடியுரிமையைக் கோருகிறோம்? : விழிப்புணர்வுகுழு

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்களின் குரல்
இலங்கைத் தமிழ் அகதிகள் என இந்தியாவின் தமிழக அகதி முகாம்களில் வாழும் நாங்கள் அகதியான விதம் உலகமே அறிந்த உள்நாட்டு யுத்தம் என்பதாக இருக்கிறது.யுத்தத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தமிழ் நாட்டுக்கு அகதியாக வந்து சேர்ந்தவர்கள். முப்பது ஆண்டுகளாக சட்ட விரோத குடியேறியவர்களாக கருதப்படுகிறோம். சிலர் இன்னும் நாடற்றவர்களாகவே உள்ளோம் இப்படி இருப்பவர்களில் மொத்தமாக 59000 பேர் முகாம்களிலும் 34000 பேர் முகாம்களுக்கு வெளியேயும் வசிக்கிறோம்.

தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை மக்கள் அனைவரும் இந்திய குடியுரிமை கோரி பல்வேறு கவனப்படுத்தல்களை செய்து வருகிறோம். இந்த நிலையில் பொது சமூகம் நாங்கள் ஏன் குடியுரிமை கோருகிறோம் என்பதற்கான காரணத்தை அகதி மக்கள் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்ட விழிப்புணர்வு குழு மூலம் கலந்துரையாடலில் நடத்தி அதனை தொகுத்திருக்கிறோம்.

சட்ட விரோத குடியேறிகளாகவும் நாடற்றவர்கள் என்ற நிலையியிலும் நாங்கள் பின்வரும் இன்னல்களை அனுபவித்து வருகிறோம்.

அகதி அல்லது சட்ட விரோத குடியேறிகள் என்ற சொல் பிரயோகம் எங்களை தாழ்வாக உணரவைக்கிறது.

அகதியாகவும் கூட எந்த ஒரு நாட்டையும் பிரநிதித்துவப்படுத்த இயலவில்லை

அகதி சமூகத்தில் இந்தியாவில் பிறந்தவர்களும் அகதியாக்கப்படுவதால் அவர்களது உரிமைகளையும் இழக்க நேரிடுகிறது.

அகதி சமூகம் என ஒரு இனக்குழு வரலாற்றில் தொடர்ந்து இருந்துவிடுமோ அவர்கள் சந்ததியினரும் அகதியாகவே அடையாளப்படுத்தப்பட்டுவிடுவோமோ எனும் அச்சம் நிலவுகிறது.

அகதி என்ற காரணத்தினால் அங்கீகாரம் மறுக்கப்படுதல் இவாய்ப்புகளை தவற விடுகிறோம்.

இதுவரை அகதி சமூகம் தனித்தே இருக்கிறது. அவர்களுடைய வாழ்வியல் முறை எந்த ஒருவகையிலும் மதிப்பீடு செய்யப்படவோ நிறை குறை இருப்பின் அதற்கான தீர்வுகளை முன்வைக்க தேவையான எந்த ஆய்வுகளும் அரசு சார்பில் செய்யப்படவில்லை. (கல்வி இடைநிற்றல் ஊட்டச்சத்து குறைபாடு இளவயது திருமணம் தற்கொலை சட்டபூர்வமற்ற விவாகரத்து உடனே மறுமணம் போன்றவை) கைவிடப்பட்ட வாழ்வியலை கொண்ட சமூகமாக உணர்கிறோம்.

எப்போதும் கண்காணிப்பிலேயே இருப்பதால் இயல்பாகவே ஒட்டிக்கொள்ளும் பய உணர்வு எங்களையும் எங்களது குழந்தைகளையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதோடு ஆளுமை பண்பை இழக்க நேரிடுகிறது.

கல்வித்தகுதி இருந்தும் அதை சரியான முறையில் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம்.

குறிக்கோள் இலட்சியம் என தூர நோக்கு சிந்தனையுடன் இயங்க இயலாமல் அன்றன்றைய வாழ்க்கையை மட்டுமே வாழ முடிகிறது.

அரசு வேலை வாய்ப்புகளைப் பெற முடியாத நிலை இருப்பதோடுஇ தனியார் துறை வேலைகளையும் வசப்படுத்திக்கொள்ள இயலாத சூழலே இருக்கிறது.

முறையாக அரசு உதவிகளை பெற்று தொழில் தொடங்கவோஇ அரசு பதிவுப்பெற்ற நிறுவனத்தை நடத்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

சில இடங்களில் சொந்த அடையாளத்தை மறைக்க வேண்டிய சூழல் இருப்பதால் சுதந்திரமாக ஒன்றை செய்ய இயலாமல் இருப்பதோடு இருப்பவற்றையும் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை.

முறையான வருமானத்திற்கான உத்தரவாதத்தை கொண்ட வாழ்வியல் இல்லாத காரணத்தால் பிடிக்காத ஒரு துறையை தேர்ந்தெடுத்து படிக்க நிர்பந்திக்கப்படுவதோடு அதன் காரணமாக இடைநிற்றலும் முதுகலை மற்றும் ஆராய்ச்சி போன்றவற்றில் பங்களிக்க இயலவில்லை.

போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினாலும்இ அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற தடையாக முன்னேற சட்ட விரோத குடியேறிகள் எனும் அடையாளம் உடன் பயணித்துக்கொண்டே இருக்கிறது.

தகுதி இருந்தாலும் மருத்துவத்துறையில் படிக்க முடியாத நிலைமை, அறிவியல், தத்துவம், வரலாறு போன்றவற்றில் ஆராய்ச்சி துறையில் பங்களிப்பு செய்ய இயலாமை.

கலைதுறை மற்றும் கலை அறிவியல் துறையில் மேலதிக சாதனைகளுக்கு ஊக்கமற்ற மனநிலையை ஏற்படுத்துகிறது.

வரையறுக்கப்பட்ட எல்லைகள் காரணமாக விசாலமாக பலதுறைகளில் பங்கு கொள்ள இயலாமலும் தனிமனிதனின் சுதந்திரம் பறிக்கப்படுவதால் பொது சமூகத்துடன் ஒன்றியிருக்க இயலாத சூழலில் சிக்குண்டிருக்கிறோம்.

மனித உரிமை மீறல்களுக்கும் சுரண்டல் நிலைக்கும் முகம்கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலையிலிருக்கிறோம்.

நிச்சயமற்ற வாழ்வியல் முறைக்குள் சிக்குண்டு இருப்பதால் எதிர்காலம் பற்றிய பயத்துடனேயே வாழ்க்கை கழிகிறது.

சிறுக சிறுக ஏதேனும் சேர்த்துவிட்டால் அதை வைத்து அசையும் சொத்துக்களோ அசையா சொத்துக்களோ வாங்குவதற்கு தடை இருப்பதால் உழைப்பு அனைத்தும் வீணாகிறது.

பொதுவாக எங்கள் சமூக பிரச்சினைக்காகவோ அல்லது சமூக காரணத்திற்காகவோ எங்களால் ஒன்றுகூடவே இயலாத சூழலில் இருக்கிறோம்.

எங்களால் ஜனநாயக பூர்வமாக கூட அமைப்புகளை உருவாக்கவோ அல்லது அவர்களுடன் இணைந்து செயற்படவோ முடியாத நிலைமை.

அரசியலில் பங்கேற்க வாய்ப்புகளே இல்லாத நிலையும்அரசியலில் தெளிவு பெற இயலாத சூழலுமாக இருக்கிறது. எந்த நாட்டின் அரசியல் எங்களுக்கானது என்ற வேள்விக்கு பதிலே இல்லை.

வெளிநாடுகளுக்கு வேலை தொடர்பாகவோ உறவினர்களை பார்க்கவோ அல்லது பூர்வீக நாட்டிற்கு சென்று திரும்பி வரவோ இயலாமல் இருக்கிறோம்.

வேலை வாய்ப்புகளில் வெளிநாட்டு வாய்ப்புகளை இழப்பதோடு பதவி உயர்வு போன்றவற்றில் எப்போதும் இரண்டாம் தரமாகவும் சில நேரங்களில் தவிர்க்கவும் படுகிறோம்.

அடிக்கடி அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ வருவதால் அவர்களிடம் பணிந்து நடப்பதுடன் கோரிக்கைகளை முனைவைப்பதாலும் உதவி கேட்பதாலும் எங்களை நாங்களே கீழ்நிலை சமூகமாக உணர்ந்து எப்போதும் எல்லாவற்றிற்கும் பயந்துக்கொண்டே இருந்தல் சரி தவறென பட்டவைகளை தட்டிக்கேட்கவோ எதிர்கொள்ளவோ இயலாத நிலை.

உயர்தொழில் செய்து வருமானவரி செலுத்தி அதன்குண்டான வாய்ப்புகளை பயன்படுத்த இயலாத நிலை. (சாதாரண பொதுமக்களை விட வருமானவரி செலுத்துபவர்களுக்கு சிலவற்றில் முன்னுரிமையும் சிலவற்றில் சில சலுகைகளும் உண்டு)

இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் இந்தியாவிலேயே ‘இந்தியத் தமிழர்களும்’ இலங்கை தமிழர்களும் நாடற்றவர்களாகவும் சட்ட விரோத குடியேறிகளாகவும் சமூகக் கூட்டம் ‘அகதி’ என்ற பெயரில் திறந்த வெளிச் சிறையில் வாழும் அவலம் சர்வதேச கவனத்தைப் பெற வேண்டும். எமக்கு நீதி கிடைக்க அனைவரதும் ஒத்திழைப்பை வேண்டி நிற்கிறோம்.

நா.சரவணன் விழிப்புணர்வுகுழு

 

 

Leave A Reply

Your email address will not be published.