இருண்ட கண்டமான கினியாவின் ஆட்சிக் கவிழ்ப்பு , புதிய பனிப்போரின் ஆரம்பமா? – சண் தவராஜா

மிகப் பெறுமதி வாய்ந்த கனிம வளங்களை அபரிமிதமாகக் கொண்ட, உலகின் அதிக வறிய நாடுகளுள் ஒன்றான மேற்கு ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள கினியாவில் லெப்டினன்ட் கேணல் மமடி டவும்பவ்யா தலைமையில் நடைபெற்ற  ஆட்சிக் கவிழ்ப்பு காரணமாக இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

அல்பா கொன்டே

அந்த நாட்டின் விசேட இராணுவப் படையணியின் தளபதி லெப்டினன்ட் கேணல் மமடி டவும்பவ்யா தலைமையில் நடைபெற்ற இந்த ஆட்சிக் கவிழ்ப்பு உலகளாவிய அடிப்படையில் கண்டனங்களைப் பெற்றுள்ளது. வழக்கத்துக்கு மாறாக, சீனா – ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாக் கொள்கைக்கு மாறாக – இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.
அது மாத்திரமன்றி, ஆட்சி மாற்றத்தின் போது கைது செய்யப்பட்ட முன்னைநாள் அரசுத் தலைவர் அல்பா கொன்டே அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும் கோரிக்கை வைத்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சீனத் தரப்பில் இருந்து வழக்கத்துக்கு மாறாக வெளிவந்த இந்தக் கண்டனத்தின் பின்னணி குறித்து உலக அரங்கில் அரசியல் நோக்கர்கள் பலரும் ஆச்சரியம் வெளியிட்டுள்ளதுடன், இது குறித்த ஊகங்களையும் தெரிவித்து வருகின்றனர். ‘இருண்ட கண்டம்’ என வர்ணிக்கப்படும் ஆபிரிக்கக் கண்டத்தில் அதிகளவில் முதலீடு செய்துவரும் நாடாக சீனா மாறியுள்ளமை ஒன்றும் இரகசியமான விடயமல்ல.

அண்மைக் காலமாக ஆபிரிக்கக் கண்டத்தின் ஒருசில நாடுகளில் கனிமவளச் சுரங்கப் பணிகளில் சீனா அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றது. அதில் கினியும் அடக்கம். இந்த நிலையில் தனது நலன்கள் பாதிக்கப்படக் கூடிய சூழலே சீனாவின் நீண்டகால தலையிடாக் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம் என ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

உலகின் பொருளாதார வல்லரசாக சீனா உருவெடுத்து வரும் நிலையில், அதனோடு போட்டிபோட முடியாத நிலையில் உள்ள அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சிக்குத் தடைபோடும் விதத்தில் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளதை அவதானிக்கும் ஒருசில நோக்கர்கள் இது புதிய பனிப் போரின் ஆரம்பம் எனக் கருதத் தொடங்கியுள்ளனர்.

அலுமினியம் உற்பத்தி செய்யத் தேவையான மூலப்பொருளான பாக்சைட் எனும் கனிமத்தை உலகிலேயே அதிக அளவில் கொண்ட நாடு கினி. பாக்சைட் மாத்திரமன்றி, இரும்புத் தாதும் இந்த நாட்டிலே அதிகம். இவை தவிர, சீமெந்து, உப்பு, பென்சில் கரி, சுண்ணாம்பு, மங்கனீஸ், நிக்கல் மற்றும் யுரேனியம் ஆகியவையும் இந்த நாட்டின் கனிம வளங்களாக உள்ளன.

உலகில் அதிக அளவில் இரும்புத் தாதுவைக் கொண்ட நாடுகளுள் ஒன்று கினியா. இங்கே அதிகளவில் இரும்புத் தாது உள்ளது என்பதற்கும் அப்பால் அதன் தரமும் அதிகமானது. இங்குள்ள இரும்புத் தாதுவில் 65 வீதம் அளவில் இரும்பு உள்ளது. சிமான்டு பிரதேசத்தில் காணப்படும் இந்த சுரங்கங்களில் இருந்து இரும்புத் தாதுவைப் பெற்றுக் கொள்ள சீனா உட்பட உலகின் பிரதான நாடுகளின் சுரங்க நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

அண்மைக் காலமாக ஆபிரிக்காவின் அல்ஜீரியா, சியரா லியோன், கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் கினி ஆகிய நாடுகளில் சீனா தனது சுரங்கத் தொழிலை விரிவாக்கம் செய்து வந்துள்ளது. சீனாவின் உற்பத்தி மற்றும் கைத்தொழில் துறைகளின் வளர்ச்சிக்கு இந்த மூலப் பொருட்கள் மிகவும் அவசியமானவை. அது மாத்திரமன்றி தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டுவரும் சீனாவின் படைத் துறைக்கும், கப்பற் படைக்கும் இந்தத் தாதுப் பொருள்கள் இன்றியமையாதனவாக உள்ளன. சீனா அதிக அளவில் தாதுப் பொருட்களை இறக்குமதி செய்துவரும் அவுஸ்திரேலியாவுடனான உறவுகள் பொருளாதாரத் தடை காரணமாக சீர்குலைந்து வரும் நிலையில், சிக்கலான நாடுகளிடம் மூலப் பொருட்கள் விடயத்தில் தங்கியிருப்பதில் இருந்து விடுபட நினைக்கும் சீனா, கினியை ஒரு முக்கியமான நாடாகக் கருதுகின்றது.

அவுஸ்திரேலிய – சீன உறவுகள் சீர்கெடுவதற்கு அமெரிக்க அழுத்தமே காரணம் என்பதை அனைவரும் அறிவோம். சீனாவுடன் நேருக்கு நேர் பொருத முடியாத நிலையில் உள்ள அமெரிக்கா – தனது வழக்கமான பாணியில் – மறைமுகமாக நெருக்கடி தரும் வழியைப் பின்பற்றி வருகின்றது. அவுஸ்திரேலியாவில் தடைகளைப் பொட்ட அமெரிக்கா, கினியில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதன் ஊடாக, தனக்கு விருப்பமான ஒருவரைப் பதவியில் அமர்த்தி, சீனாவின் நலன்களுக்கு எதிராகக் காய்நகர்த்த முயற்சிக்கின்றது. வல்லரசுகளின் இந்தப் போட்டிக் களத்தில் பகடைக் காயாக கினி சிக்கியிருக்கின்றது.

மமடி டவும்பவ்யா தலைமையில் நடைபெற்ற இந்த ஆட்சிக் கவிழ்ப்பு

இதனைப் புரிந்து கொள்வதற்கு, தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள லெப்டினன்ட் கேணல் மமடி டவும்பவ்யா அவர்களின் பின்னணியை அறிந்து கொள்வது அவசியமானது. பிரெஞ்சு இராணுவத்தின் ஒரு பிரிவான பிரென்ஞ் வெளிநாட்டுப் படை(French Foreign Legion) யின் ஒரு உறுப்பினராகச் செயற்பட்டவர் இவர். (உலகில் உள்ள 140 வரையான நாடுகளின் பிரசைகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தப் படை, பிரான்ஸ் நாட்டுக்காக உலகின் பல நாடுகளிலும், பிராந்தியங்களிலும் போர்களிலும், படை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. 1831 மார்ச் 13 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படை, ஆரம்பத்தில் பிரான்சின் காலனித்துவ விரிவாக்கத்துக்கு உதவியது. தற்போதுவரை இதே நோக்கத்தோடு பிரான்ஸ் முன்னெடுத்துவரும் அனைத்துப் படை நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகின்றது.)

இது தவிர, பிளின்ற்லொக் (Flintlock) என்ற பெயரில் அமெரிக்கா வழங்கிய இராணுவப் பயிற்சிகளிலும் இவர் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கைகளுக்கான இந்தப் பயிற்சி 2005 இல் ஆரம்பமானது. 2007ஆம் ஆண்டில் அமெரிக்க-ஆபிரிக்க கட்டளை மையம் (AFRICOM) தோற்றுவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆபிரிக்கக் கண்டத்தின் 53 நாடுகளிலும் இராணுவத்தின் உயர் மட்டங்களில் உள்ளனர். வேறு விதமாகச் சொல்வதானால் அமெரிக்காவின் விசுவாசிகள் ஆபிரிக்க நாடுகளின் இராணுவத்தில் உயர் பதவிகளில் உள்ளனர். இவர்கள் – சொந்த நாட்டு மக்களின் நலன்களைப் புறந்தள்ளி – அமெரிக்காவின் நலன்களைப் பேணுவதற்காக எப்போதும் தயாராகவே உள்ளனர்.

உலகில் அதிகம் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் அல்லது கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெறும் கண்டமாக ஆபிரிக்கா உள்ளது. 1950களின் பின்னான காலப்பகுதியிலேயே ஆபிரிக்காவின் பெரும்பாலான நாடுகள் சுதந்திரம் பெற்றன. அவ்வாறு சுதந்திரம் பெற்ற நாள் முதலாக இன்றுவரை சுமார் 200 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் அரைவாசி முயற்சிகள் வெற்றியும் பெற்றுள்ளன.

ஆபிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை சூடான் நாட்டிலேயே அதிகளவான இராணுவக் கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெற்றுள்ளன. அந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட 15 முயற்சிகளில் 5 மாத்திரமே வெற்றி பெற்றன. ஆனால், புர்க்கினோ பாசோ என்ற நாட்டிலேயே அதிக அளவிலான இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இங்கு மேற்கொள்ளப்பட்ட 8 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளில் ஒன்று மாத்திரமே தோல்வியில் முடிந்தது. புருண்டி – 11, கானா மற்றும் சியாரா லியோன் தலா 10, கொமொரோஸ் தீவுகள் – 9, நைஜீரியா, கினி பிசு, மாலி மற்றும் பெனின் ஆகியவை தலா 8, நைஜர் மற்றும் சாட் ஆகியவை தலா 7 என இந்தப் பட்டியல் மிகவும் நீளமானது.

சமாதான ஆய்வு ஜேர்ணல் என்ற நிறுவனம் 2017 இல் இராணுவச் சதிகள் பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டிருந்தது. 1970 முதல் 2009 வரையான 40 வருடங்களில் உலகின் 189 நாடுகளில் நடைபெற்ற இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றோரில் மூன்றில் இரண்டு வீதமானோர் அமெரிக்காவில் இராணுவப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டவர்கள் என்கிறது அந்த அறிக்கை.
அண்மைக் காலங்களில் மேற்கு ஆபிரிக்காவின் மாலி, நைஜர், கினி ஆகிய நாடுகளில் இராணுவச் சதியில் ஈடுபட்டோர் யாவரும் அமெரிக்கப் பயிற்சி பெற்றவர்களாகவே உள்ளனர் என்பதைத் தற்செயல் நிகழ்வாகக் கருதிவிட முடியாது.

இறுதியாக கினியில் நடைபெற்றுள்ள இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு பனிப் போரின் ஒரு புதிய ஆரம்பமாகவே அமையுமானால் உலகின் எதிர்காலம் அச்சுறுத்தல் மிக்கதாகவே அமையப் போகின்றது என எதிர்வு கூறுவதற்கு வல்லுநர்கள் யாரும் தேவையில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

Leave A Reply

Your email address will not be published.