ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடையுத்தரவு !

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மஞ்சுள வசந்த உள்ளிட்ட 21 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக வேறு சிலர் பெயரிடப்படுவதை தடுத்தே இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்ததாக குற்றம் சுமத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், அடிப்படை ஒழுக்காற்று நடவடிக்கைக்கேனும் முகங்கொடுக்க சந்தர்ப்பம் வழங்காமல், கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கியமை நியாயமற்றது என தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஆராய்ந்த கொழும்பு மாவட்ட நீதவான் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் 29 ஆம் திகதி மன்றில் ஆஜராகி, இது தொடர்பில் விடயங்களை முன்வைக்குமாறு மனுவின் பிரதிவாதிகளான ரணில் விக்ரமசிங்க, மற்றும் பாலித்த ரங்கே பண்டார மற்றும் ஒழுக்காற்று குழுவின் செயலாளர் அமித்த ஜயசேகர உள்ளிட்டோருக்கு அறிவித்தல் பிறப்பித்தும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறைப்பாட்டாளர்கள் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி தியத் விஜேகுணவர்தன, ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.