இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிசய பூமி

மன்னார் பேசாலைப் பகுதியில் எம் – 2 என அழைக்கப்படும் காவிரி பள்ளத்தாக்கில் 2,000 மில்லியன் பீப்பாய்கள் கனிய எண்ணெய் வளம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இக்கனிய வளங்களை பயன்படுத்துவதன் மூலம் இலங்கையின் முழுக் கடனையும் அடைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

குறித்த பகுதியில் 09 டிரில்லியன் கன அடி எரிவாயு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு 17 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். எனவே இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனையிலிருந்து எமக்கு 167 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்ட முடியும்.

இலங்கை அரசாங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் தற்போது 47 பில்லியன் அமெரிக்க டொலருக்கு கடன்பட்டுள்ளது.

அவற்றிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழியாக மன்னார் பேசாலை கனிய எண்ணெய் வளம் மற்றும் எரிவாயுவை ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றும், இந்தக் கனிய வளங்களை பயன்படத்துவதுடன் மூலம் இலங்கையின் முழுக் கடனையும் அடைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தினாலும் 133.5 பில்லியன் அமெரிக்க டொலரை மீதப்படுத்தலாம் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு வளங்களை ஆய்வு செய்வது ஒரு முக்கியமான தருணத்தை எட்டியுள்ளதாகவும், அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் பெட்ரோலிய அபிவிருத்திச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் பெட்ரோலிய அபிவிருத்தி ஆணைக்குழு இதற்காக அமைக்கப்படும் என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக முதற்தடவையாக விமானங்களைப் பயன்படுத்தி தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனத்தின் ஊடாக குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.