தொடர்கின்றன ஊடக அடக்குமுறைகள்! – சஜித் சீற்றம்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சி போன்று கோட்டாபய ராஜபக்ச ஆட்சியிலும் ஊடக அடக்குமுறைகள் தொடர்கின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் ‘பலவேகய’, தமிழ் மொழியிலான ‘ஐக்கிய குரல்’ பத்திரிகை, மின்னிதழ் மற்றும் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முதலாளித்துவம், தனவாத சிந்தனையுடன் செயற்படுகின்றவர்கள் தனது பணம், வேறு அதிகாரங்களைப் பயன்படுத்தி ஊடகங்களில் போலிப் பிரசாரங்களை மேற்கொள்வதோடு, நாட்டு மக்களை தவறாக வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

மக்களுக்கு உண்மையை வெளிக் கொணர்வதற்காக பலவேகய மற்றும் ஐக்கிய குரல் ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்படுகின்றது.

ஒவ்வொரு பிரதேசத்திலும் கீழ்மட்டத்திலிருந்து ஊடக வலையமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்.

பகுத்தறிவை மையப்படுத்திய ஓர் எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அதற்கு இப்பத்திரிகை முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று நம்புகின்றோம்.

இந்த ஆரம்பகட்ட முயற்சியுடன் இணைந்ததாக கிராமிய மட்டங்கள் தோறும் சரியான தகவல்களை வழங்கக்கூடிய ஊடகக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ச ஆட்சி போன்று கோட்டாபய ராஜபக்ச ஆட்சியிலும் ஊடக அடக்குமுறைகள் தொடர்கின்றன. அரசுக்குத் வக்காளத்து வாங்கும் ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குகின்றன. இவ்வாறான சில ஊடகங்கள்தான் நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்ற, திசை திருப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.