லொஹானுக்கு எதிராக சுயாதீன விசாரணை தேவை! – தேசிய சமாதானப் பேரவை.

“லொஹான் ரத்வத்தை ஒரு அமைச்சர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அவருக்கு எதிராக சுயாதீனமான விசாரணையொன்று நடத்தப்படுவதே பொருத்தமானது” என்று தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியிருக்கின்றது.

“அதற்குரிய செயன்முறைகளில் மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய முறையில் விசாரணையாளர்களை பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இருதரப்பு கருத்தொருமிப்பின் அடிப்படையில் நியமிக்கவேண்டும்” எனவும் அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

சமாதானப் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா இது தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையொன்றில் கூறியிருப்பதாவது:-

“சிறைச்சாலை முகாமைத்துவ அமைச்சராக இருந்த லொஹொன் ரத்வத்த சிறைச்சாலைக்கு சென்று தமிழ்க்கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தன் முன்னால் முழந்தாழிடச்செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தண்டனைக்கு பயமின்றி செயற்படும் போக்கு எந்தளவு மோசமான மட்டத்திற்கு சென்றிருக்கிறது என்பதை காட்டும் ஒன்றாக இருக்கிறது என்று இலங்கை சமாதானப் பேரவை குற்றஞ்சாட்டியிருக்கிறது.

நாட்டில் சட்டம், ஒழுங்கு, நிறுவனங்களின் சுயாதீனம், ஜனநாயக நாடொன்றில் அரசாங்கத்தின் ஒவ்வொரு கிளையினதும் அதிகாரங்களை ஒழுங்குபடுத்தும் ஏற்பாடுகளும் அத்துமீறப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் முகங்கொடுக்கவேண்டியிருக்கிறது.

இதுவரையில் ரத்வத்த சிறைச்சாலை முகாமைத்துவஇராஜாங்க அமைச்சர் என்ற பொறுப்பில் இருந்து மாத்திரமே பதவி விலகியிருக்கிறார். ஆனால்,ஏனைய அமைச்சு பொறுப்புக்களில் இருந்து அவர் பதவி விலகவில்லை.

சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் தினத்திற்கு பல நாட்கள் கழித்தே தான் அத்தகைய சம்பவம் எதிலும் சம்பந்தப்படவில்லை என்று ரத்வத்த கூறியிருப்பதையும் சிறைச்சாலை முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்துவிலகியதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

லொஹான் ரத்வத்தை ஒரு அமைச்சர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அவருக்கு எதிராக சுயாதீனமான விசாரணையொன்று நடத்தப்படுவதே பொருத்தமானது என்று தேசிய சமாதானப் பேரவை நம்புகிறது. அதற்குரிய செயன்முறைகளில் மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய முறையில் விசாரணையாளர்களை பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இருதரப்பு கருத்தொருமிப்பின் அடிப்படையில் நியமிக்கவேண்டும்.

அதேவேளை, விசாரணை முடிவடையும்வரை அமைச்சர் தனது சகல அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்தும் விலகியிருக்கவேண்டும்.அவராக விலகாவிட்டால் விலக்கப்படவேண்டும். இந்த சம்பவம் தண்னைக்கு பயப்படாமல் தவறுகளை சுதந்திரமாக செய்யும் பாரதூரமான போக்குடன் சம்பந்தப்பட்டதாகும்.ஆட்சிமுறையில் மனித உரிமைகளுக்கும் மனித கௌரவத்துக்கும் மதிப்பளிக்காத போக்கையும் சம்பவம் குறித்து நிற்கிறது.

தண்டனைக்கு பயப்படாமல் அரசாங்க தரப்பினர் சுதந்திரமாக தவறுகளைச் செய்யும் போக்கு ஒரு நீண்டகாலப் பிரச்சினையாகும். இன்றைய ஆட்சியில் மாத்திரமல்ல அதற்கு முன்னைய ஆட்சிகளின் கீழும் இது இடம்பெற்றுக்கொண்டேயிருக்கிறது.

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் தாங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்துக்கொண்டு எந்தவிதமான பொறுப்புக்கூறல் கடப்பாடும் இல்லாமல் தண்டனைக்கு பயப்படாமல் செய்கின்ற இத்தகைய காரியங்களே நாட்டை ஜெனீவாவுக்கு கொண்டுசென்றிருப்பதுடன் நாட்டில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகளை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, மூன்று தசாப்த கால போரும் நீண்டகால அவசரகால நிலையும் இத்தகைய முறைகேடான செயற்பாடுகளுக்கு அரசியல் ஏற்புடைமையைக் கொடுத்திருந்தன.

ஆனால், 12 வருடங்களுக்கும் கூடுதலாக காலத்துக்கு முன்னர் போர் முடிவடைந்துவிட்டது. சட்டம், ஒழுங்கை மீளநிலைநாட்டுவதென்றும் ஒழுங்கு கட்டுப்பாட்டு நடைமுறைகளை தேசிய விழுமியங்களாக போற்றுவதென்றும் வாக்குறுதி அளித்த வண்ணமே பிரதான அரசியல் கட்சிகள் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டன.

கடந்த காலத்தில் இருந்து எம்மைத் துண்டித்துக்கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தேசிய சமாதானப் பேரவை நம்புகிறது.அரசாங்கம் நாட்டுக்கும் தேசிய நலன்களுக்கும் சேவைசெய்வதானால், சொன்னதைச் செய்யவேண்டும்.அரசாங்க தலைவர்கள் சட்ட வரம்புகளுக்குள் செயற்படவேண்டும். அரசாங்கத்தின் ஒவ்வொரு கிளைக்கும் உரித்தான அதிகாரங்களை ஒழுங்குபடுத்தும் அரசியலமைப்பு ஏற்பாடுகளை (தடுப்புக்களும் சமப்படுத்தல்களும்)யும் நிறுவனங்களின் சுயாதீனத்தையும் மதித்துநக்கவேண்டும்.அவர்கள் அடிப்படைப் கண்ணியத்தையும் நாகரிகத்தையும் வெளிக்காட்டவேண்டும்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.